Published : 09 Dec 2017 08:06 PM
Last Updated : 09 Dec 2017 08:06 PM

காங்கேயம் பசுக்களை ஏலம் விட உயர் நீதிமன்றம் தடை

சென்னை ஓசூர் கால்நடைப் பண்ணையில் உள்ள 12 காங்கேயம் இன பசுக்களை ஏலம் விடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

ஓசூரில் உள்ள கால்நடைப் பண்ணையில் உள்ள குதிரைகள், பசுக்கள், ஆடு வகைகள் வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஏலம் விடப்படும் என, பண்ணையின் இயக்குனர் கடந்த மாதம் 24-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஏலம் விடப்படும் விலங்குகள் பட்டியலில் 12 காங்கேயம் இனப் பசுக்களும் உள்ளன.

இந்த அறிவிப்பை ரத்துசெய்யக் கோரியும், ஏலத்திற்கு தடை விதிக்கக் கோரியும், திருப்பூர் பாளையகோட்டை பட்டாகர் கால்நடைப் பண்ணையின் தலைவர் ராஜ்குமார் மன்றாடியார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், காங்கேயம் மாடுகளை உருவாக்கியது தன் மூதாதையர் எனவும், தங்கள் பண்ணையில் இருந்த சில பசுக்களையும், காளைகளையும் ஓசூர் கால்நடைப் பண்ணைக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது, தகுதியில்லாத கால்நடைகள் எனக் கூறி, 12 காங்கேயம் பசுக்களை ஏலம் மூலம் விற்க ஓசூர் கால்நடைப் பண்ணை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், இதன் காரணமாக காங்கேயம் இனம் அதன் உண்மைத்தன்மையை இழந்துவிடும். இதனால் அந்த பசுக்களை தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மிருகவதைத் தடைச் சட்டத்தின் கீழ் தகுதியில்லாத கால்நடைகளை விற்கக் கூடாது என்பதால், டிசம்பர் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ள ஏலத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க ஓசூர் கால்நடைப் பண்ணை இயக்குனருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x