Published : 06 Oct 2023 03:08 PM
Last Updated : 06 Oct 2023 03:08 PM

அரசு உத்தரவாதம் அளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

கோப்புப்படம்

சென்னை: "மூன்று மாத காலத்துக்குள் எங்களுடைய ஊதிய முரண்பாடு சரிசெய்யப்படும் என்ற அரசின் உத்தரவாதத்தால் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்" என்று இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊதிய முரண்பாட்டை சரிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காக்கர்லா உஷா வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த, இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் பொருளாளர் கண்ணன் கூறியது: "கடந்த 28-ம் தேதி முதல், டிபிஐ வளாகத்தில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதத்தின் முடிவில், தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆகியோர், எங்களுடையை சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை பரிசீலித்து, 3 மாத காலத்துக்குள் நிறைவேற்றித் தருவதாகவும், 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு சரிசெய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

எங்களுடைய கோரிக்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆகியோர் மீண்டும் ஒருமுறை பரிசீலித்து, எங்களது கோரிக்கையின் நியாயத்தை நிறைவேற்றிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில், எங்களுடைய கோரிக்கை ஏற்கப்பட்டதால், இன்று முதல் பள்ளிக்குச் சென்று பணிபுரிய உள்ளோம். இந்த முடிவு அனைவராலும் எடுக்கப்பட்டது.

இன்றிலிருந்து, பணிக்குச் செல்ல முடிவு செய்துள்ளோம். மூன்று மாத காலத்துக்குள், எங்களுடைய ஊதிய முரண்பாடு சரிசெய்யப்படும் என்ற அரசின் உத்தரவாதத்தால் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். இன்று முதல் நாங்கள் பணிக்குத் திரும்புகிறோம். இந்த 8 நாட்களாக எங்களுடன், எங்களுக்காக பயணித்த அனைவருக்கும் நன்றி.

எங்களுடைய பணி எப்போதும்போல சிறப்பாக இருக்கும். எண்ணும் எழுத்தும் திட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு, தமிழக அரசுக்கும், முதல்வருக்கும், கல்வித் துறைக்கும் நல்ல பெயரை வாங்கித் தருவோம் என்று கூறி, எங்களது போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். இந்தப் போராட்டத்தை கைவிடக் கோரி அரசு சார்பில் யாரும் எங்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் இல்லை" என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஊதிய முரண்பாட்டை சரிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து, பல்வேறு பகுதிகளில் உள்ள சமூகநல கூடங்களில் அடைத்தனர். அங்கும் போராட்டத்தை தொடர்ந்ததால் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். விடுவித்தாலும் போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x