Published : 06 Oct 2023 02:50 PM
Last Updated : 06 Oct 2023 02:50 PM

சென்னை - முகப்பேர் கிழக்கு பகுதியில் வானம் பாத்த பேருந்து நிலையம்!

மேற்கூரை இல்லாமல் காணப்படும் முகப்பேர் கிழக்கு 7 எச் பேருந்து நிலையம்.

சென்னை: சென்னை மாநகராட்சி 92-வது வார்டு முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகரில் 120-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. எந்த தெருக்களிலும் பெயர் பலகை இல்லை. இந்த வார்டில் வீட்டு வசதி வாரியம் மூலமாக விற்கப்பட்ட மனைகள் மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் அதிகம் உள்ளன.

இங்குள்ள பெரும்பாலான தெருக்களில் மழைநீர் வடிகால் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதனால் வேணுகோபால் தெரு, வயலட் ஆருண் சர்ச் தெரு, வெள்ளாளர் தெரு, பாரதிதாசன் தெரு, மசூதி தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் வழிந்தோட வழியின்றி வெள்ளம்போல தேங்கி கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

பல இடங்களில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய மரங்களின் கிளைகள் வீடுகளுக்கு உள்ளேயும் பரவியுள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இபி காலனி தெரு வழியாகச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மழைநீர் தேங்கி சிதிலமடைந்துள்ளது.

இதனால் இரவு நேரங்களில் இவ்வழியே செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கழிவுநீர் தொட்டிகளின் மூடிகள் உடைந்துள்ளதால் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை உள்ளது.

வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் துறைக்கு சொந்தமான 8 இடங்களில் உள்ள சுமார் 2 ஏக்கர் நிலங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. இந்த நிலங்கள் அப்பகுதி குடியிருப்புவாசிகளின் நிரந்தர வாகன நிறுத்துமிடங்களாகவும், சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் மாறிவருகின்றன. இந்த நிலங்களை மாநகராட்சி தனது கட்டுப்பாட்டில் எடுத்து சுகாதார மையங்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் சமூக நலக்கூடங்களை கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. பூமி்க்கு அடியில் மின்கம்பிகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

40-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமென்றாலும் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன. அவற்றை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட வேண்டும். அதேபோல 40-க்கும் மேற்பட்ட கழிவுநீர் தொட்டிகளையும் மாற்றியமைக்க வேண்டும்.

மழைநீர் தேங்கி காணப்படும் முகப்பேர் கிழக்கு
வெள்ளாளர் தெரு.

முகப்பேர் கிழக்கின் முக்கிய அடையாளமாக திகழும் 7எச் பேருந்து நிலையத்தில் மேற்கூரை இல்லாமல் வானம் பார்த்த பேருந்து நிலையமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களிலும், வெயில் காலங்களிலும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். பேருந்துகளைக்கூட மர நிழல் பார்த்து நிறுத்துகி்ன்றனர். பேருந்து நிலைய கழிப்பறைகளில் தண்ணீர் வருவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த வார்டில் இலவச மின் மயானங்கள் இல்லை. இலவச மயானங்கள் இருந்தும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சில தனிநபர்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் ரூ.ஒரு லட்சம் வரை கறாராக லஞ்சம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் வேறு பகுதிகளில் உள்ள இலவச மயானங்களுக்கு சடலங்களை தூக்கி செல்லும் அவலம் நிலவுகிறது.

அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் நடத்தப்படும் போட்டிகளுக்கு மைதான வாடகையாக ரூ. 5 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தப்படுகிறது. ஆனால் முறையான பராமரிப்பு கிடையாது. தேவையான இடங்களில் உயர் மின் கோபுரங்கள் இல்லை என்பது இப்பகுதி பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதுதொடர்பாக இந்த வார்டு பொதுமக்கள் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கதா

பஜனை கோயில் தெரு கதா: முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பல தெருக்கள் தாழ்வாக உள்ளன. மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீர் அடிக்கடி தெருக்களில் வெள்ளம்போல சூழ்ந்து நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. மழைநீர் வடிகால்களை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளைக்கூட மாநகராட்சி இன்னும் முன்னெடுக்கவில்லை.

இந்த வார்டு உள்ளிட்ட இன்னும் 3 வார்டுகளுக்கும் சேர்த்து கோயம்பேடு பகுதியில் ஒரே ஒரு பம்பிங் ஸ்டேஷன் மட்டுமே உள்ளது. அதில் உள்ள மின்மோட்டார் அடிக்கடி பழுதாகி விடுவதால் கழிவுநீர் தடையின்றி செல்லாமல் வீடுகளுக்குள் புகுந்து விடுவது முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இப்பகுதியில் காலியாக விடப்பட்டுள்ள அரசு நிலங்களில் உடனடியாக பம்பி்ங் ஸ்டேஷனுடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கெஜவல்லி குமார்

மகிளா காங்கிரஸ் நிர்வாகியான கெஜவல்லி குமார்: மங்கள் ஏரி பூங்கா போல வார்டில் உள்ள மற்ற பூங்காக்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காக்களில் பழுதடைந்துள்ள உடற்பயிற்சி சாதனங்களை மாற்றியமைக்க வேண்டும். இந்த வார்டில் வாடகைக்கு உள்ள பல ரேஷன்கடைகளை சொந்த கட்டிடங்களுக்கு மாற்ற வேண்டும். இதற்காக மங்கள் ஏரி பூங்கா உள்ளிட்ட பிறஇதர பூங்காக்களுக்கு உள்ளேயே கட்டிடங்களை கட்டி மாற்ற வேண்டும். ஸ்ரீசந்தான சீனிவாசப் பெருமாள் கோயில் சாலையை புதிதாக அமைத்து மின்விளக்குகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும்.

எஸ்.ஜான்சி மேரி

வேணுகோபால் தெரு எஸ்.ஜான்சி மேரி: முகப்பேர் கிழக்கு வெள்ளாளர் தெருவில் உள்ள சாலை படுமோசமான நிலையில் உள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். பல இடங்களில் குடிநீர் அடிபம்பு மூலமாகவே பிடிக்கப்படுகிறது. மேடான பகுதிகளில் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதை சரிசெய்ய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை அமைக்க வேண்டும். இலவச கழிப்பறைகள், குளியலறைகள் அறைகளை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். பல்வேறு இடங்களில் குப்பைத்தொட்டிகளில் கொட்டப்படும் கழிவுககளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கவுன்சிலர்
வே.திலகர்

இதுதொடர்பாக மாநகராட்சி 92-வது வார்டு கவுன்சிலர் வே.திலகர் கூறும்போது, எனது வார்டில் உள்ள குறைகளைக் களைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள், பேருந்து நிலைய மேற்கூரை பணிகள், பம்பிங் ஸ்டேஷன், சுகாதார மையத்துடன் கூடிய உடற்பயிற்சி மையங்கள், ரேஷன் கடைகளை சொந்த கட்டிடங்களுக்கு இடமாறுதல் செய்தல், சாலை மராமத்து, குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலவச மயானத்துக்கு சிலர் லஞ்சம் கேட்பதாக வந்த புகார் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளேன் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x