Published : 06 Oct 2023 01:24 PM
Last Updated : 06 Oct 2023 01:24 PM

செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் புதிய உற்பத்தி திட்டம் மற்றும் விரிவாக்கத்தில் 1150 பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் தகவல்

சென்னை: "செயிண்ட் கோபைன் நிறுவனம், ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தித் திட்டமும், திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் திட்டங்களில் விரிவாக்கமும் மேற்கொள்ள உள்ளது.சுமார் 3400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1150 நபர்களுக்கு வேலை வாய்ப்பு மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்கான அனைத்து உதவிகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில், பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் கோபைன் (Saint-Gobain) நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாக இயக்குநர்கள் குழுவினரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அந்தக் கூட்டத்தில் முதல்வர் பேசியது: "தமிழகத்துக்கும் செயிண்ட் கோபைன் நிறுவனத்துக்குமான உறவு ஏறத்தாழ 25 ஆண்டு வரலாறு கொண்டது. 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம், திருப்பெரும்புதூரில் இந்நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டி வைத்தவர், மறைந்த முதல்வர் கருணாநிதி.

தமிழ்நாட்டில், திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில், செயிண்ட் கோபைன் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களை நிறுவி, இதுகாறும் ஏறத்தாழ 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளது. தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தையும் சென்னையில் அமைத்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் 9 அன்று, திருப்பெரும்புதூர் செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் மிதவைக் கண்ணாடிப் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, நகர்ப்புற வனம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டேன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது செயிண்ட் கோபைன் நிறுவனம், ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தித் திட்டமும், திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் திட்டங்களில் விரிவாக்கமும் மேற்கொள்ள உள்ளது. இம்மாநிலத்தில் நல்லாட்சி மற்றும் சிறப்பான முதலீட்டுச் சூழல் அமைந்திருப்பதற்கான அத்தாட்சியாகவே நான் கருதுகிறேன்.சுமார் 3400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1150 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்று மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்கான அனைத்து உதவிகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். உங்களது தொழில் முயற்சிகள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று முதல்வர் பேசினார்.

இக்கூட்டத்தில், செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைவர் பியரி ஆன்ட்ரி டி சேலண்டர் ( Pierre-Andre de Chalendar), தலைமை செயல் அலுவலர் பெனாய்ட் பாசின் ( Benoit Bazin) உள்ளிட்ட செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு, ஆகியோர் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x