Published : 04 Oct 2023 05:54 AM
Last Updated : 04 Oct 2023 05:54 AM

மாதர் தேசிய சம்மேளன மாநில மாநாடு | ஆர்எஸ்எஸ், பாஜகவை வீழ்த்தும் வரை போராடுவோம்: பொதுச் செயலாளர் ஆனி ராஜா உறுதி

திருச்சியில் நேற்று இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனி ராஜா. படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: ஆர்எஸ்எஸ், பாஜகவை வீழ்த்தும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று மாதர் தேசிய சம்மேளன அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஆனி ராஜா கூறினார்.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 15-வது மாநில மாநாடு திருச்சியில் நேற்று தொடங்கியது. மாநாட்டைத் தொடங்கிவைத்து சம்மேளனத்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஆனி ராஜா பேசியதாவது:

இந்தியாவில் பாஜக ஆட்சிக்குவந்த பின்னர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பழங்குடியினர் மீதான வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டுள்ளது. பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ், பாஜக போன்றவை நாட்டில் வெறுப்புணர்வை வளர்த்து வருகின்றன.

இந்தியாவில் பெண்களைப் பாதுகாக்க நிறைய சட்டங்கள் இருந்தாலும், அவை செயல்படாமல் உள்ளன. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டாலும், அது இப்போதைக்கு அமல்படுத்தப்படாது. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி மறுவரையறை செய்த பிறகுதான் அமல்படுத்தப்படும் என்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை.எனவே,பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை வீழ்த்தும் வரை மாதர் சம்மேளனம் போராடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநிலத் தலைவர் பி.பத்மாவதிதலைமை வகித்தார். அமைப்பின்மாநில முன்னாள் செயலாளர் வசந்தா ரத்தினவேலு மாநாட்டுக் கொடியேற்றினார். மாநில துணைச் செயலாளர் டி.பி.லலிதா, தியாகிகள் நினைவுச்சுடரைப் பெற்றுக் கொண்டார். இன்று (அக். 4) மாலை பொதுக்கூட்டத்துடன் மாநாடு நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x