Published : 29 Dec 2017 02:40 PM
Last Updated : 29 Dec 2017 02:40 PM

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக டிடிவி தினகரன் பதவியேற்பு: வழியெங்கும் தொண்டர்கள் வாழ்த்து

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் இன்று (வெள்ளிக்கிழமை) முறைப்படி பதவி ஏற்றார். சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, வழியெங்கும் தொண்டர்கள் வாழ்த்துக்களுடன் தலைமைச்செயலகம் வந்தார் தினகரன்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த டிச.21 நடந்தது. டிச.24 வாக்குகள் எண்ணப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள் போட்டியிட்டன.

டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்கவில்லை. அவருக்கு குலுக்கல் முறையில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. 20 நாளில் குக்கர் சின்னத்தை முன்னுக்கு கொண்டுவந்து அதை வெற்றி பெறவும் வைத்தார்.

இடைத்தேர்தலில் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளரான தினகரன் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவை தவிர அனைத்துக்கட்சிகளும் டெபாசிட் இழந்தன. இதையடுத்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட டிடிவி தினகரன் இன்று முறைப்படி எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார்.

மதியம் 12 மணிக்கு மேல் கிளம்பி தலைமைச் செயலகம் வந்த அவரை அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், ரெங்கசாமி உள்ளிட்ட பலரும் வரவேற்றனர்.

சசிகலா புஷ்பா நேரில் வாழ்த்து:

டிடிவி தினகரன் பதவி ஏற்பதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துச்சொல்லிய நிலையில் ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா, தினகரன் வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சசிகலா புஷ்பா தலைமை செயலகத்துக்கும் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

திறந்த வாகனத்தில் பதவியேற்க வந்தார்:

தனது இல்லத்திலிருந்து திறந்த வாகனத்தின் மூலம் தொண்டர்களின் வாழ்த்துக்களோடு பதவியேற்க தலைமை செயலகம் வந்தார் தினகரன். தலைமை செயலகத்தில் தினகரன் பதவியேற்பதை அடுத்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அடையாறு, பட்டினப்பாக்கம், சாந்தோம், போர் நினைவுச்சின்னம் என வழிநெடுகிலும் தொண்டர்கள் திரண்டு நின்று வாழ்த்து தெரிவித்தனர். காமராஜர் சாலையில் வழி நெடுகிலும் தொண்டர்கள் நின்று வாழ்த்து தெரிவித்தனர்.

பதவி ஏற்ற கையோடு ஜன.2, 3-ம் தேதி ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்தை தொகுதியில் தினகரன் நடத்த உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x