Published : 11 Dec 2017 02:13 PM
Last Updated : 11 Dec 2017 02:13 PM

ஓட்டுக்கு பணம் தரும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய சட்டத் திருத்தம் தேவை: ராமதாஸ்

எந்த ஒரு தொகுதியிலும் ஓட்டுக்காக பணம் கொடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட  தொகுதியின் தேர்தலை ஒத்தி வைக்கவும், பணம் கொடுத்த வேட்பாளரை தகுதி நீக்க வசதியாக மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய அரசும், தேர்தல் ஆணையமும் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அங்கு பண மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஓட்டுக்காக மக்களுக்கு பணம் கொடுக்க ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் வகுத்துள்ள திட்டங்கள் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளைக் காணும் போது ஜனநாயகம் என்ன ஆகுமோ? என்ற ஐயம் எழுகிறது.

ஆளும் அதிமுக, ஆண்ட திமுக, அதிமுக ஆட்சியில் அதிகாரத்தை சுவைத்து பணத்தை குவித்து வைத்துள்ள கூட்டத்தின் பிரதிநிதியான தினகரன் ஆகியோர் சார்பில் ஓட்டுக்கு ரூ.20,000 வரை வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சியினர்  அவர்களின் அதிகார பலத்தைப் பயன்படுத்தி இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குள் பணத்தைக் கொண்டு சென்று வினியோகிக்கத் தொடங்கியுள்ளனர். மற்ற வேட்பாளர்களால் தொகுதிக்குள் பணத்தைக் கொண்டு செல்ல முடியாத நிலையில், அவர்கள் தொகுதிக்கு வெளியில் பணத்தை பதுக்கி வைத்துக் கொண்டு வாக்காளர்களை சிறு சிறு குழுக்களாக அழைத்துச் சென்று பணத்தை வழங்கி வருகின்றனர். இந்த பண வினியோகத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டப் பிறகு   விதிமீறல்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதற்கு ஓரளவு பயனும் கிடைத்துள்ளது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தமிழக அரசு எந்திரம் எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்காததால் அதைத் தடுக்க முடியவில்லை. இனிவரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக் கூடும். இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த இடைத் தேர்தலில் எந்த அளவுக்கு பணம் வினியோகிக்கப்பட்டதோ, அதைவிட அதிக பணம் இப்போது  வினியோகிக்கப்படவுள்ளது என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும். கடந்த தேர்தலில் தினகரன் சார்பில் ஓட்டுக்கு ரூ.4000 வீதம் ரூ.89 கோடி வினியோகிக்கப்பட்டது. திமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.2000 வீதம் ஒரு சில பகுதிகளில் வழங்கப்பட்டது. பன்னீர்செல்வம் அணியில் களமிறங்கிய மதுசூதனனுக்காகவும் பல இடங்களில் பணம் வினியோகிக்கப்பட்டது. கடந்த முறை ஒவ்வொரு வாக்காளருக்கும் சராசரியாக  ரூ.5000 வழங்கப்பட்டதாக வைத்துக் கொண்டால், இம்முறை அதைவிட 4 மடங்கு வழங்கப்படவுள்ளது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க  தேர்தல் ஆணையம் தான் காரணம் ஆகும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட குற்றச்சாற்றின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்ட போதே, ‘‘அது மட்டும் போதாது. ஓட்டுக்கு பணம் கொடுத்த அனைத்து வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட தேர்தல் ஆணையம், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் இடமில்லை என்று கூறிவிட்டது. அதன் விளைவு தான் அப்போது பணத்தை வாரியிறைத்த அதே வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட்டு பண வெள்ளத்தைப் பாய விடுகின்றனர். தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட போதும் பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாததால் அடுத்து நடந்த தேர்தலில் பணமழை பெய்தது.

கடந்த முறை ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்ததால், இந்த முறை அவர்கள் போட்டியிட்டிருக்க முடியாது. அதுமட்டுமின்றி, இப்போது புதிதாக போட்டியிடுவோருக்கும், ‘ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவோம்’ என்ற அச்சம் இருக்கும் என்பதால்  ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியும். இந்த யோசனையை பாட்டாளி மக்கள் கட்சி பல முறை கூறியும் அதை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயங்குவது ஏன்? என்பது தெரியவில்லை.

ஓர் இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒரு கட்சி ரூ.200 கோடி செலவழித்தால், அந்தப் பணத்தை மீண்டும் சம்பாதித்த எவ்வளவு ஊழலில் ஈடுபடும் என்பதையும், இதேநிலைத் தொடர்ந்தால் தமிழகத்தில் ஊழலை  எவ்வாறு ஒழிக்க முடியும்? என்பதை தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும்? அனைத்து ஊழல்களுக்கும் அடிப்படை தேர்தல் ஊழல் தான் என்பதால் அதை ஒழிக்க தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஒரு தொகுதியிலும் ஓட்டுக்காக பணம் கொடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட   தொகுதியின் தேர்தலை ஒத்தி வைக்கவும், பணம் கொடுத்த வேட்பாளரை தகுதி நீக்க வசதியாக மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய அரசும், தேர்தல் ஆணையமும் முன்வர வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x