Published : 26 Dec 2017 02:47 PM
Last Updated : 26 Dec 2017 02:47 PM

தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை: காலம் தாழ்ந்தது என எஸ்.குருமூர்த்தி விமர்சனம்

 ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தினகரன் ஆதரவாளர்கள் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இது, காலம் தாழ்ந்த நடவடிக்கை என துக்ளக் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான எஸ்.குருமூர்த்தி விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான, ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் அதிமுக 2-வது இடத்துக்கும், பிரதான எதிர்க்கட்சியான திமுக 3-வது இடத்துக்கும், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக நோட்டாவைவிட குறைவான வாக்குகளைப் பெற்று பரிதாபகரமான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன.

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுகவின் அவசர ஆலோசனைக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நேற்று (திங்கள்) கூட்டப்பட்டது. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தென்சென்னை வடக்கு மாவட்டச்செயலாளர் வி.பி. கலைராஜன், நெல்லை மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, கட்சி செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத், மகளிர் அணி துணைச் செயலாளர், கட்சி செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், பார்த்திபன், தங்கத் தமிழ்ச்செல்வன், ரெங்கசாமி ஆகியோர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதுபற்றி துக்ளக் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான எஸ்.குருமூர்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது: எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தலைவர்களாக செயல்படத் தொடங்கியுள்ளனர். தலைவரின் பாதத்தை தொடுவதும், லஞ்சம் வாங்குவதையும் மட்டுமே இதுவரை அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு தினகரன் ஆதரவு நிர்வாகிகள் ஒன்பது பேர் மீது அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பலவீனமான தலைவர்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கை எடுத்துள்ளனர்’’ எனக்கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x