Last Updated : 27 Sep, 2023 03:22 PM

 

Published : 27 Sep 2023 03:22 PM
Last Updated : 27 Sep 2023 03:22 PM

ரயில்வேயின் கனிவான கவனத்துக்கு... பேட்டரி கார் இல்லை, சக்கர நாற்காலிக்கு கட்டுப்பாடு, அடிப்படை வசதி இல்லை!

சென்னை: ரயில் பயணத்தின்போதும், ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லவும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், மாற்றுத் திறனாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் 650 புறநகர் ரயில் சேவைகளும் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சுமார் 8 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இவர்களில் 40,000 பேர் மாற்றுத் திறனாளிகள். வேலை, படிப்பு என பல்வேறு தேவைகளுக்காக ரயில்களில் பயணிக்காத நாளே இல்லை. ஆனாலும் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் போதும் பயணத்தின்போதும் அவர்கள் சிரமத்தை சந்திக்காத நாளும் இல்லை.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு, ரயில் நிலைய நடைமேடைகளுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்வதற்காக தொடங்கப்பட்ட இலவச பேட்டரி கார் வசதி, தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு கட்டண சேவையாக மாற்றப்பட்டது. இதனால், மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைத்து வந்த எளிய சலுகையும் இல்லாமல் போனது.

மேலும் முக்கிய ரயில் நிலையங்களில் நிலைய அதிகாரி அறைகளில் சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும். நடைமேடைக்கு செல்லவோ அல்லது ரயில் நிலையத்துக்கு வெளியே வரவோ இந்த சக்கர நாற்காலியை பயன்படுத்த தரப்படுகிறது. இதை பெற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாற்றுத் திறனாளிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

அடையாள அட்டையை காண்பித்து பெறப்படும் சக்கர நாற்காலி ரயிலில் ஏறிய பிறகு, மீண்டும் நிலைய அதிகாரி அறையில் ஒப்படைக்க வேண்டும். உதவியாளர் இன்றி வரும் மாற்றுத் திறனாளிகளால் இது சாத்தியமல்ல. மேலும் ரயிலுக்கான நேரத்தை கருதியும் சக்கர நாற்காலி பெறுவதை தவிர்த்து சிரமத்துடனே செல்கின்றனர்.

பா.சிம்மச்சந்திரன்

இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து தெற்கு ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினரும் தமிழக மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான பா.சிம்மச்சந்திரன் கூறியதாவது: 21 வகை மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் ஊனமுற்றோர், பார்வையற்றோர், தண்டுவடம் பாதித்தோர், உயரம் குறைவானோர் உட்பட 9 வகையானவர்கள் ரயில் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி இல்லாததால், கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

விரைவு ரயிலில் கடைசி அல்லது முன் பெட்டியில் சில பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் ரயில்வே ஊழியர்கள், காவல் துறையினர் என கூறி பலர் ஏறி ஆக்கிரமித்து கொள்கின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்வது கிடையாது. மேலும், பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் வருவதில்லை. இதனால், இந்த கழிவறைகளை பயன்படுத்துவதை தவிர்த்து சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகின்றனர்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் 5 மற்றும் 6, 7-வது நடைமேடையில் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல நகரும் படிக்கட்டுகள் இல்லை. இதேபோல, மாம்பலம் உட்பட முக்கிய ரயில்நிலையங்களில் நகரும் படிக்கட்டு, மின்தூக்கி வசதி இல்லை. இதனால், இங்கு வந்து செல்வது மாற்றுத்திறனாளிகளுக்கு கடும் சவாலாகவே உள்ளது.

இதேபோல் மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் வரும் மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லை. இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னையில் பெரும்பாலான ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இவ்வாறு கூறினார்.

எம்.ஜி.ராகுல்

திண்டிவனத்தைச் சேர்ந்த உயரம் குறைந்த மாற்றுத் திறனாளி எம்.ஜி.ராகுல் கூறும்போது,"திரிசூலம், மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயிலில் இருந்து இறங்க சிரமமாக உள்ளது. ஏனெனில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் 3 அடி அளவுக்கு இடைவெளி உள்ளது. இதனால் குதிக்கத்தான் வேண்டும். இறங்குவது சாத்தியமல்ல. தாம்பரம் ரயில் நிலையத்தில் 5 முதல் 8-வது நடைமேடை வரை நகரும் படிக்கட்டு, மின்தூக்கி வசதி இல்லை. பெரும்பாலான புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை" என்றார் அவர்.

எஸ்.நம்புராஜன்

இதேபோல் தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க துணைத் தலைவர் எஸ்.நம்புராஜன் கூறியதாவது: ஐக்கியநாடுகள் சபையில் 2007-ல் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச மாநாட்டில், அனைத்து இடங்களையும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக அணுகத்தக்க வகையில் மாற்றங்கள் செய்யப்படும் என இந்திய அரசு உறுதி அளித்தது.

இதுதவிர, மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 இயற்றப்பட்டது. இதில்பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், காது கேளாதோர் உட்பட பலவகை மாற்றுத்திறனாளிகள் ரயில் நிலையங்களை அணுகத்தக்க விதமாக, வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், போதிய வசதிகள் இன்னும் ஏற்படுத்தவில்லை.

இலவச பேட்டரி வாகனத்தைக் கூட வணிக ரீதியாக மாற்றிவிட்டனர். சக்கர நாற்காலி வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் குறித்து போதியவிழிப்புணர்வு அதிகாரிகளுக்கு இல்லை. முதலில் ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்த போதிய நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னை ரயில்வே கோட்டத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டு, மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. சக்கர நாற்காலிகள் அளிக்கப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், தற்போது 15 நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இடம்பெறும்.

இதுதவிர எழும்பூர், தாம்பரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களிலும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன்மூலமாக, இந்த நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கூடுதல் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

இலவச பேட்டரி வாகனத்தைகூட வணிகரீதியாக மாற்றிவிட்டனர். சக்கர நாற்காலி வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு அதிகாரிகளுக்கு இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x