Published : 23 Dec 2017 09:53 AM
Last Updated : 23 Dec 2017 09:53 AM

சிதம்பரம் திருவாதிரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு கப்பல் சேவை: 35 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பாடு

சிதம்பரம் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு, இலங்கையிலிருந்து பக்தர்கள் கலந்துகொள்ள யாழ்ப்பாணத்திலிருந்து சிறப்பு கப்பல் சேவைக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் சிவாலயங்களில், முதன்முதலாக வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலை என ஸ்தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரைத் திருவிழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு திருவிழாவின் கொடியேற்றம் டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தினமும் பகல் மற்றும் இரவில் உற்சவர்கள் சோமாஸ்கந்தர், சிவானந்தநாயகி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எதிர்வரும் ஜனவரி 1-ம் தேதி தேர்த் திருவிழாவும், ஜனவரி 2-ம் தேதி நண்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. ஜனவரி 3-ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இலங்கையில் உள்ள பவுத்தர்கள் இந்தியாவில் உள்ள கயாவுக்கும், கிறிஸ்தவர்கள் ஜெருசலேத்துக்கும், முஸ்லிம்கள் மக்கா செல்வதற்கும் அந்நாட்டு அரசு வசதிகளை செய்து தருகிறது. அது போல நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்துகொள்ள இலங்கையிலுள்ள இந்து பக்தர்கள் சிறப்பு கப்பல் மூலம் குறைந்த செலவில் செல்ல அனுமதிக்க வேண்டும் என, வட மாகாணத்தில் உள்ள இயக்கங்கள் இந்தியா-இலங்கை அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, இலங்கை அரசு வெளியுறவுத் துறை மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன் துறையிலிருந்து சென்னைக்கு சிறப்பு கப்பல் பயணத்துக்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி கூறியதாவது:

இந்திய அரசு சிறப்பு கப்பல் சேவைக்கான கோரிக்கையை 2016-ம் ஆண்டே ஏற்றுக் கொண்டது. கடந்த ஆண்டு குறுகிய நாட்களில் இரு நாட்டு வெளியுறவுத் துறையால் பயண ஏற்பாட்டை உடனடியாக செய்ய முடியவில்லை. சிதம்பரம் திருவாதிரை திருவிழாவில் கலந்துகொள்ள இலங்கையைச் சேர்ந்த பக்தர்களின் வசதிக்காக, யாழ்ப்பாணம் காங்கேசன் துறையிலிருந்து சென்னைக்கு டிசம்பர் 24–ம் தேதி முதல் ஜனவரி 3–ம் தேதி வரை கப்பல் சேவை இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.

35 ஆண்டுகள் கழித்து யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்துக்கு கப்பல் சேவை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x