Published : 21 Sep 2023 11:44 AM
Last Updated : 21 Sep 2023 11:44 AM

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை பாஜக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: "நீட் தேர்வின் பலன் என்ன என்றால் '0' தான் என்பதை ஒன்றிய பாஜக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. NEET = 0 என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நீட் தேர்வின் பலன் என்ன என்றால் '0' தான் என்பதை ஒன்றிய பாஜக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் '0' தான் என்று வரையறுப்பதன் மூலமாக NEET என்றால் National Eligibility Cum Entrance Test என்பதில் உள்ள Eligibilityக்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். கோச்சிங் செண்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது.

NEET = 0 என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள். NEET என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பாஜக ஆட்சியை அகற்றியாக வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும்நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தும் மாநில கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கியது. இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x