Published : 06 Dec 2017 03:07 PM
Last Updated : 06 Dec 2017 03:07 PM

முன் மொழிந்த 10 பேரை விஷால் சந்தித்தாரா?- முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி கேள்வி

விஷால் வேட்புமனு மட்டுமல்ல மேலும் 70-க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தன்னை முன் மொழியும் நபர்கள் நம்பிக்கையானவர்கள் தானா? என்பதை நேரில் ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தெரிவித்தார்.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. முன்மொழிந்த 10 பேரில் இரண்டு பேர் தாங்கள் விஷாலை முன் மொழியவில்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடியானது. அதன் பின்னர் விஷால் பேசியதை அடுத்து வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இரவு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஏன் இத்தனை குழப்பம், விஷால் மனுவில் தேர்தல் ஆணைய நடைமுறை சரியா? இரண்டுமுறை முடிவுகள் ஏன் மாறியது என்பது குறித்து 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் பல சந்தேகம் உள்ளது, இத்தனை குழப்பம் உள்ளது, அதுபற்றி தங்கள் கருத்து?

மொத்தம் எத்தனை வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 70 க்கும் மேற்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் உங்களுக்கு சந்தேகம் வரவில்லை, விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதில் சந்தேகம் வருவது தான் பிரச்சினையே.

அவர் பிரபலமானவர் என்பதால்தானே இந்த கேள்வி வருகிறது?

அதைத்தான் சொல்கிறேன். பிரபலமானவர் என்று ஊடகங்கள் பார்க்கிறீர்கள் வேட்பாளராக தேர்தல் ஆணையம் பார்க்கிறது.

அவருக்கு முன் மொழிந்த 10 பேரில் இரண்டு பேர் நாங்கள் முன் மொழியவில்லை என்று திடீரென கூறுகிறார்களே?

அவர் 10 பேரை பார்த்திருக்க மாட்டார், யாரிடமாவது கையெழுத்து வாங்கச்சொல்லியிருப்பார். தனக்காக முன் மொழியும் 10 பேரை அவர் சந்தித்திருக்க வேண்டும் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் தேர்தல் ஆணையம் முதலில் தள்ளுபடி என்கிறது, பின்னர் ஏற்கிறது, மீண்டும் தள்ளுபடி செய்கிறது அதனால் தானே குழப்பமே வருகிறது?

அவர் தர்ணாவில் உட்கார்ந்தார், மேலே கூப்பிட்டு நாங்கள் மேலே அனுப்புகிறோம் என்று கூறியிருப்பார்கள். அவர் சென்றிருப்பார்.

வெளியே வேட்பு மனு ஏற்றுக்கொண்டதாக பேட்டியும் அளித்தாரே?

யார் என்ன சொன்னார்கள் என்று அங்கு இல்லாத நான் சொல்ல முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது உண்மை வெளிவரும்.

இரண்டு பேர் நாங்கள் முன் மொழியவில்லை என்று சொல்கிறார்கள், விஷால் அவர்கள் கையெழுத்து போட்டார்கள் என்கிறாரே?

10 பேர் கையெழுத்து போடுகிறார்கள், அதில் இரண்டு பேர் நேரடியாக போய் நாங்கள் கையெழுத்து போடவில்லை என்று சொல்கிறார் என்றால், ஆணையம் யாரை நம்பும். சம்பந்தப்பட்டவர் சொல்வதை நம்புமா, வாங்கியவர் சொல்வதை நம்புமா. சம்பந்தப்பட்டவர் சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ளும். அதன் பிறகு விஷால் தரப்பு சொல்வது எப்படி எடுபடாது அல்லவா. சம்பந்தப்பட்டவர் நேரில் வந்து இல்லை என்று சொல்லிவிட்டார் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது.

இது விளையாட்டு சமாச்சாரமல்ல, அவரிடம் சம்பந்தப்பட்ட 10 பேரிடம் நேரில் பேசினீர்களா என்று கேட்டுப் பாருங்கள். தேர்தலில் நிற்பவர் தனக்காக சப்போர்ட் செய்பவரைக் கூட பார்க்காவிட்டால் அப்புறம் என்ன வேட்பாளர் அவர்.

இதே போன்று முக்கிய அரசியல் தலைவர்கள் 10 பேரை சந்திப்பது சாத்தியமா?

சந்தித்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவர் அதை சந்தித்துத்தான் ஆக வேண்டும். அவர்கள் தெளிவாக இருப்பார்கள். முக்கிய அரசியல் தலைவர்கள் யார் 10 பேர் கையெழுத்து போட வேண்டும் என்பதை நன்றாக அறிந்திருப்பார்கள்.

புதிதாக வருபவர்களுக்கும் அதையே வழக்கமாக கொண்டவர்களுக்கும் இதுதான் வித்தியாசம். விஷால் பெரிய விஷயத்தை முடிவு செய்து இறங்கும் போது இதுபோன்ற சிறிய விஷயங்களையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறு கோபாலசுவாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x