Published : 20 Sep 2023 07:17 AM
Last Updated : 20 Sep 2023 07:17 AM

தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அமைச்சருடன் சந்திப்பு: தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வலியுறுத்தல்

சென்னை: காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி, டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு சந்தித்து மனு அளித்துள்ளது.

காவிரி தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மாதாந்திர நீர் அளவு அட்டவணை நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, செப்.14-ம் தேதி நிலவரப்படி, கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 103.5 டிஎம்சியில் 38.4டிஎம்சி மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இதுகுறித்து, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை உத்தரவிட்டும் கர்நாடகா தண்ணீர் திறக்காமல் உள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியுள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு, நேற்று முன்தினம் மத்தியஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்திக்க டெல்லி சென்றனர். ஆனால், அவரை சந்திக்க இயலவில்லை. இதையடுத்து, நேற்று காலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்தக் குழுவில், டி.ஆர்.பாலு(திமுக), மு.தம்பிதுரை, சந்திரசேகரன் (அதிமுக), எஸ்.ஜோதிமணி (காங்கிரஸ்), கே.சுப்பராயன் (இந்திய கம்யூ), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிய கம்யூ) வைகோ (மதிமுக), அன்புமணி (பாமக), திருமாவளவன் (விசிக), ஜி.கே.வாசன் (தமாகா), கே.நவாஸ்கனி (ஐயுஎம்எல்), ஏ.கே.பி. சின்னராஜ் (கொமதேக) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதுதவிர, சந்திப்பின்போது, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும் இருந்தார். சந்திப்பின்போது, தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டிய உரிய நீரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: கர்நாடக அணைகளில் 54 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கின்றனர். அவர்களுக்கு தண்ணீர் தரும் எண்ணம் துளியும் கிடையாது. ஆங்காங்கே சின்ன அணைகளை கட்டி தண்ணீரை, கேஆர்எஸ் அணைக்கு முன்னதாகவே தேக்கியுள்ளனர். காவிரி முறைப்படுத்தும் குழு செப். 13-ம்தேதி தண்ணீர் திறக்க அறிவுறுத்தியும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை கேட்கவே வந்தோம்.

நாங்கள் அணை தண்ணீரை முழுமையாக திறக்கச் சொல்லவில்லை. பங்கீட்டின் அடிப்படையில் கேட்டுள்ளோம். தராததால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம்.

காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் விளக்கி கூறியுள்ளோம். நாங்கள் அமைச்சரிடம் மனு அளித்ததும், முறைப்படுத்தும் குழு தலைவரை அழைத்து பேசினார். அவர் குடிநீர்பற்றாக்குறை குறித்து தெரிவித்தார். நாங்களும் இங்குள்ள பல பகுதிகள் குடிநீருக்கு அந்த தண்ணீரை நம்பியுள்ளதை தெரிவித்தோம். மத்தியஅரசு இதில் ஒன்றும் நடவடிக்கை எடுக்காவிட்டால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க வேண்டியதுதான்.

கர்நாடகா தண்ணீர் இல்லை என்றாலும் தமிழகத்துக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கும்படி கூறியுள்ளோம் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x