Published : 17 Sep 2023 05:10 AM
Last Updated : 17 Sep 2023 05:10 AM
ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடியை பிடிக்க முயன்றபோது அவர் கத்தியால் தாக்கியதில் இரு தலைமைக் காவலர்கள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் அந்த ரவுடியை சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் கிளாய் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் விஷ்வா(எ)குள்ள விஷ்வா(35) என்பவர் மீது 4 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு உட்பட 16 வழக்குகள் உள்ளன. இவர் இந்தப் பகுதியில் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்தச் சூழ்நிலையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையிலான போலீஸார் இவரை கைது செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டி வந்தனர். அவரை தேடும்போது சோகண்டி பகுதியில் இவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய தனிப்படையினர் சோகண்டி விரைந்தனர்.
குள்ள விஷ்வா இருக்கும் இடத்தை சுற்றி வளைத்த போலீஸார் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது குள்ள விஷ்வா தன் கையில் இருக்கும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு போலீஸாரை தாக்கினார். இந்த தாக்குதலில் வாசு, ராஜேஷ் என்ற இரு தலைமைக் காவலர்கள் பலத்த காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் குள்ள விஷ்வாவை சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். அவரது உடல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வைக்கப்பட்டால் ஏதேனும் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் காஞ்சிபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டிஐஜி பொன்னி மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டார்.
காயமடைந்த போலீஸார் ராஜேஷ், வாசு ஆகியோர் ஏனாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை ஏடிஜிபி அருண் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிறகு அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் நிரம்பி இருக்கின்றன. இதில் தொழில் போட்டி காரணமாக ரவுடிகள் பெருகி வருகின்றனர். இவர்களை ஒடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். அப்போது, சரக டி.ஐ.ஜி.பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT