Published : 01 Dec 2017 10:40 AM
Last Updated : 01 Dec 2017 10:40 AM

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 87 இடங்களில் 225 கண்காணிப்பு கேமராக்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தகவல்

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க 87 இடங்களில் 225 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தா.கார்த்திகேயன் நேற்று தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவில் பங்கேற்கும் மத்திய, மாநில அரசுப் பணியாளர்களுக்கான முதல்கட்ட தேர்தல் பயிற்சி, வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. அதை தேர்தல் பொது பார்வையாளர் கம்லேஷ் குமார் பந்த், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் ஆணையர் தா.கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் பணியாளர்களுக்கு முதல் கட்ட தேர்தல் பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. 2-ம் கட்ட பயிற்சி டிசம்பர் 8-ம் தேதியும், 3-ம் கட்ட பயிற்சி 16-ம் தேதியும் நடைபெற உள்ளது. பெரும்பாலானோர் பயிற்சிக்கு வந்துவிட்டனர்.

கடும் நடவடிக்கை

சிலர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. இன்றைய பயிற்சிக்கு வராதவர்கள், அதற்கான விளக்கக் கடிதம் அளித்து அடுத்த பயிற்சியில் பங்கேற்கலாம். இல்லாவிட்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது வழக்கமான துறைரீதியான நடவடிக்கை போன்று இருக்காது. தேர்தல் ஆணைய அதிகாரத்தின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கையாக இருக்கும்.

இந்தத் தொகுதியில் 50 அமைவிடங்களில் 256 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் என்பதால், அனைத்து வாக்குச் சாவடிகளும் பதட்டமானவையாக கருதப்படும். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் நிறுத்தப்படுவர்.

இத்தொகுதியில் 12 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு தடுப்புக் கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 87 இடங்களில் 225 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கேமரா மூலம், காட்சிகள் 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும். அதை அதிகாரிகளும் பார்வையிடுவார்கள். அதில் சந்தேகத்துக்கு இடமான செயல்கள் இருப்பின், உடனடியாக கள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

விவிபேட் கருவி

இந்தத் தேர்தலிலும் விவிபேட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் கருவிகள், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்தக் கருவியில், வாக்காளர் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கிறாரோ, அவரது சின்னம் அச்சாகி, அதை சில வினாடிகள் பார்க்கவும் முடியும். அதை வேறு யாரும் பார்க்க முடியாது. இத்தேர்தலுக்காக பெங்களூரில் இருந்து 360 விவிபேட் இயந்திரங்கள் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளன.

இத்தொகுதியில் வசிப்போரின் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அவர்களுக்கு தனி பாஸ் வழங்கப்படும். இதன் மூலம் வெளியில் இருந்து தொகுதிக்குள் பிற வாகனங்கள் நுழைவது தடுக்கப்படும். வெளியூர் வாகனங்கள் உள்ளே வர வேண்டும் என்றால், தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி பெற்றுதான் வர வேண்டும்.

சிலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அவர்களின் பெயர்களைச் சேர்க்கும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதி்ல 1716 மனுக்கள் பெறப்பட்டன. இந்த நிகழ்வு வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உயரதிகாரிகள் தலைமையில் மனுதாரர்களின் வீடுகளுக்குச் சென்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மனு அளித்துள்ளன. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x