Published : 13 Sep 2023 05:05 AM
Last Updated : 13 Sep 2023 05:05 AM

தமிழகத்தின் 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் ரூ.400 கோடியில் 100 கண் சிகிச்சை மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில், 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேக்சிவிஷன் மருத்துவமனை நிறுவனம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழகம், தானியங்கி வாகனங்கள், ஜவுளி, காலணி மற்றும் தோல் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு என பல்வேறு வகையான தொழில்களை நிறுவ ஊக்கமளிப்பதன் மூலம், முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தொடர்ந்து விளங்கி வருகிறது.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்அளவுக்கு உயர்த்த வேண்டும் என முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

அதிக முதலீடுகள் ஈர்ப்பு: இந்த இலக்கை விரைவில் அடைவதற்காக, அதிக முதலீடுகளை ஈர்த்து, தமிழக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்கு மகுடம் சூட்டும் வகையில், வரும் 2024 ஜன.7, 8-ம் தேதிகளில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒப்பந்தம் கையெழுத்து: இந்நிலையில், மேக்சிவிஷன் குழுமம், ரூ.400 கோடி முதலீடு மற்றும் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழகத்தில் 2, 3-ம் நிலை நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசுக்கும், மேக்சிவிஷன் குழுமத்துக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்டிஆர்பி ராஜா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தொழில் துறை செயலர் அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, மேக்சிவிஷன் நிறுவனத்தின் தலைவர் ஜிஎஸ்கே வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தரமான கண் சிகிச்சையை எளிதாகவும், குறைந்த கட்டணத்திலும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழகம், தெலங்கானா, குஜராத், ஆந்திர பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் 42 பல்நோக்கு சிறப்பு கண் மருத்துவமனைகளை அமைத்துள்ள பெரிய வலையமைப்பு கொண்ட குழுமம் என்பதுகுறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x