Published : 12 Sep 2023 10:36 PM
Last Updated : 12 Sep 2023 10:36 PM

“உச்ச நீதிமன்றத்தில் வாதாடி காவிரி நீரைப் பெறும் முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்” - அமைச்சர் துரைமுருகன்

அமைச்சகர் துரைமுருகன் | கோப்புப்படம்

சென்னை: கர்நாடகா அணைகளிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உச்சநீதிமன்றத்தில் வாதாடி, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு அளித்த இறுதி ஆணையின்படியும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின்படியும், நீர்ப்பற்றாக்குறை வருடங்களில் நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் குறைபாடு விகிதாச்சாரத்தின்படி பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றம் CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உத்தரவிட்டதன்படி, ஜூன், 2018 முதல் இவ்வமைப்புகள் நடைமுறையில் உள்ளன.

தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், மழையளவு குறைந்து இருப்பினும், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு CWRC மற்றும் CWMA ஆகிய அமைப்புகள் தமிழகத்துக்கு பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரின் அளவை குறைபாடு விகிதாசாரத்தின் படி கணக்கிட்டாலும், அவ்வாறு கணக்கிடப்பட்ட அளவை விடக் குறைவாகவே 15 நாட்களுக்கு ஒரு முறை உத்தரவிட்டு வருகின்றன. அதையும் அளிக்க கர்நாடகா மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகத்தான் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய தேதியில் (12.09.2023) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 63.801 டி.எம்.சி. ஆகும். மேலும், செப்டம்பர் மாதத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி மழை பெய்ய வாய்புள்ளது. இதன் மூலம் சுமார் 10 டி.எம்.சிக்கு மேல் செப்டம்பர் மாதத்தில் கிடைக்கும். இதுதவிர, வடகிழக்கு பருவ மழை காலத்திலும், இந்த 4 அணைகளுக்கு குறைந்தது 30 டி.எம்.சி. நீர் கிடைக்க வாய்ப்புள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, CWRC கர்நாடக அணைகளில் இருந்து நாளை (13.09.2023) முதல் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5000 கன அடி வீதம் 6.48 டி.எம்.சி நீர் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இது பற்றாக்குறை விகிதாச்சாரப்படி பார்த்தாலும் மிகக் குறைவு தான். இதையும் கர்நாடக அரசு அளிக்க முடியாது என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.

உச்சநீதிமன்ற ஆணையின்படி ஒரு ஆண்டில் கர்நாடகா குடிநீருக்காக உபயோகிக்கக்கூடிய நீரின் அளவு
6.75 டி.எம்.சி மட்டுமே. இதற்காக காவிரியிலிருந்து எடுக்க வேண்டிய நீரின் அளவு 33.75 டி.எம்.சி என்றாலும், அதில் குடிநீர் பயன்பாட்டிற்கு பிறகு காவிரி படுகையில் கர்நாடகா திரும்ப அளிக்க வேண்டிய நீர் (Return flows) 27 டி.எம்.சி ஆகும். நிலைமை இவ்வாறு இருக்க, குடிநீர் தேவை என்ற போர்வையில் கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலே ஆகும்.

இவ்வாறு, ஒரு மூத்த கர்நாடக அமைச்சர் இரு மாநில விவசாயிகளின் நலன்களை கருதாமல் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்சனை குறித்து எடுத்துரைத்து, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு காவிரி நீர் தரும் நிலையில் கர்நாடகா இல்லை என்று அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக அதிகாரிகள் சென்றுள்ளனர். காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாததால் கர்நாடகாவில் தற்போது தண்ணீர் இல்லை. இந்த உண்மையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அவர்கள் உணர்த்துவார்கள். தண்ணீர் இல்லாததால் கர்நாடகாவில் குடிநீர் வழங்குவதுகூட சிரமமாக உள்ளது என்பதை தெரிவிப்பார்கள். தயவு செய்து குடிநீரை சேமிக்கவாவது அனுமதியுங்கள் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுப்பார்கள். தற்போது தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் செல்லவில்லை. காரணம் மழை இல்லை. மழை பொழிய எல்லோரும் கடவுளிடம் வேண்டுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 29-ம் தேதியில் இருந்து தமிழகத்துக்கு நாள்தோறும் 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட்ட கர்நாடகா தற்போது அதனை நிறுத்தி உள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “தமிழகத்துக்கு 177 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது. சாதாரண ஆண்டுகளில் அந்த அளவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இக்கட்டான நேரத்தில், பேரிடர் ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும். ஆனால் தமிழகம் தேவையில்லாமல் சிக்கலை உருவாக்குகிறது. பாஜக கூறுவது போல, கர்நாடக அரசு மகிழ்ச்சியுடன் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் காரணமாகவே தண்ணீரை திறக்கிறது. மாநில விவசாயிகளின் நலன் மற்றும் மைசூரு, பெங்களூரு மற்றும் பல மாவட்டங்களின் குடிநீர்த் தேவைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை. அதற்காகவும்தான் தண்ணீரை திறக்கிறோம். மாநில அரசைப் பொறுத்தவரை, நீர் கொள்கையில், குடிநீருக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேநேரம், பயிர்களைப் பாதுகாக்க தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி ஆணையம் கூறியதால் கர்நாடக அரசு அதை செய்தது.

திமுக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. செப்டம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. அப்போது அரசு உண்மை நிலையை எடுத்துரைக்கும். முன்னதாக, இன்று (செப்டம்பர் 12) நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் அரசு தனது நிலைப்பாட்டை முன்வைக்கும். எனது அரசாங்கம் இந்த விவகாரத்தில் அரசியலுக்கு விலைபோகாது. மேலும், மாநில விவசாயிகளின் நலனில் சமரசம் செய்யாது. ஆகஸ்ட் இறுதி வரை தமிழகத்துக்கு 86 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும். ஆனால் அதில் பாதிகூட நாங்கள் விடுவிக்கவில்லை" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x