Published : 13 Sep 2023 04:52 AM
Last Updated : 13 Sep 2023 04:52 AM

மணல் குவாரி, சேமிப்பு கிடங்கு, குவாரி அதிபர்களின் வீடுகள் உட்பட 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்கு,குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கனிம வளத் துறை அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம்ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இந்தநிலையில், இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே உள்ள முத்துப்பட்டினத்தை சேர்ந்த மணல் ஒப்பந்ததாரரும், கம்பன் கழகத் தலைவருமான எஸ்.ராமச்சந்திரனின் வீடு, புதுக்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அடுத்த கோவிலடி, திருவையாறு அடுத்த மரூர் உள்ளிட்ட இடங்களில் ராமச்சந்திரன் நிர்வகித்து வரும் மணல் குவாரிகள் நேற்று மூடப்பட்டன. கரூர் மாவட்டம் மல்லம்பாளையம் மணல் குவாரியும் இயங்கவில்லை.

திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் வசிக்கும் தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அவருக்குநெருக்கமானவர்களாக கருதப்படும்சண்முகத்துக்கு சொந்தமான புனல்குளம் கிராவல் குவாரி, புதுக்கோட்டையில் உள்ள கட்டிட பொறியாளர் பாலா, மணிவண்ணன், மழவராயன்பட்டி வீரப்பன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்தது.

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள மணல் விநியோக மையத்தில் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறையினர் அங்கு, தினமும் அள்ளி சேகரிக்கப்படும் மணலின் அளவு, வெளியே அனுப்பப்படும் மணல் லோடுகள் குறித்தும், டோக்கன்இல்லாமல் மணல் அனுப்பப்படுகிறதா என்பது குறித்தும் ஆவணங்களை பார்வையிட்டு, அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் உள்ள மணல் குவாரி, செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அங்கு உள்ள மணல் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்தினர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனை காரணமாக, மணல் அள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த பெருமாநல்லூரில், கொசஸ்தலை ஆற்றில் கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கனிம வளத் துறை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ், முகப்பேரில் உள்ள பொறியாளர் திலகம், நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் போக்குவரத்து துறை மேலாளர் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது.

அனைத்து இடங்களிலும், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த இந்த சோதனையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு கடந்த 2016-ல் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது, சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றியபிரமுகர்கள் பட்டியலை வருமான வரித் துறை சேகரித்தது. இதில், சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரும் சிக்கினார். இதையடுத்து, அவருடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை,அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கிடைத்தமுக்கிய ஆவணங்களின் அடிப்படையில், அவரது நெருங்கிய கூட்டாளிகளாக இருந்த மணல் குவாரி ஒப்பந்ததாரர்களான புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம்ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பல கோடிரூபாய் பணம், அதிக அளவில் தங்கம் சிக்கியது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x