Published : 12 Sep 2023 07:26 AM
Last Updated : 12 Sep 2023 07:26 AM

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: இடஒதுக்கீட்டின் பலன்கள் மக்களுக்கு துல்லியமாக சென்றடையதமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மக்களவை தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக சோழ மண்டல காங்கிரஸ் வாக்குச்சாவடி உறுப்பினர்கள், நகர, மாநகர, ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை கும்பகோணத்தில் அண்மையில் நடத்தி இருந்தோம். அடுத்ததாக திண்டுக்கல், தேனி ஆகிய மக்களவை தொகுதி நிர்வாகிகள் கூட்டம்21-ம் தேதியும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் 24-ம் தேதியும், திருவள்ளூர் தொகுதிக்கு 30-ம் தேதியும், விருதுநகர், தென்காசி தொகுதிகளுக்கு அக்.8-ம் தேதியும்,கன்னியாகுமரி தொகுதிக்கு அக்14-ம் தேதியும், தூத்துக்குடி,திருநெல்வேலி தொகுதிகளுக்கு அக்.22-ம் தேதியும் நடைபெற உள்ளன. மற்ற தொகுதிகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

எப்போதோ எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பலன்கள் துல்லியமாக மக்களுக்கு சென்றடைவதில்லை. இட ஒதுக்கீட்டின் பலன்கள்பாரபட்சமின்றி, சமமாக, துல்லியமாக மக்களை சென்றடைய தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.

பிரதமர் மோடி, இந்தியாவின் பெயரை மாற்றி இருக்கலாம். ஆனால் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் இந்தியா என்று தான் கூறினர். ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்த பிரதமர் மோடி முயற்சிக்கலாம். நாட்டில் சட்டம், நீதிமன்றங்கள் உள்ளன. அதில் அவரது முயற்சி தோற்கடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கட்சியின் மூத்ததலைவர்கள் ஆருண், பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, உ.பலராமன், எம்பிக்கள் செல்லக்குமார், ஜெயக்குமார், மாணிக்கம் தாகூர், விஜய்வசந்த், அசன் மவுலானா உள்ளிட்ட எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பி பெ.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x