Published : 12 Sep 2023 07:14 AM
Last Updated : 12 Sep 2023 07:14 AM

தியாகி இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் சிலையுடன் மணிமண்டபம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இமானுவேல் சேகரன்

சென்னை: சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வதுஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பரமக்குடியில் அரசு சார்பிலும், பல்வேறு கட்சிகள் சார்பிலும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

தியாகி இமானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இமானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து மணிமண்டபம் அமைக்க கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்கூறியிருப்பதாவது:

நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்: தியாகி இமானுவேல் சேகரனார் கடந்த 1924-ம் ஆண்டு அக்.9-ம் தேதி பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடினார்.

இந்நிலையில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தியாகி இமானுவேல் சேகரனாரின் சமூக பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடிமதிப்பில் இமானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரது போராட்ட வாழ்வையும், சமுதாய பங்களிப்பையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x