Published : 12 Sep 2023 08:05 AM
Last Updated : 12 Sep 2023 08:05 AM
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
சென்னையை அடுத்து, கடலூர் மாவட்டத்தில்தான் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. நடுவில் உள்ள செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்களுடைய விசைப் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்த விழுப்புரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில், அழகன்குப்பம் பக்கிங்ஹாம் கால்வாயிலும், ஆலம்பராகோட்டை அருகிலும் ஒரு மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அதிமுக அரசு கடந்த 2020-ம் ஆண்டு ரூ.235 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியது.
அதன்படி, இப்பணிக்கான பணித்தளம் ஒப்பந்ததாரருக்கு ஒப்படைக்கப்பட்டு, 2022-ம் ஆண்டு ஜன.7-ம் தேதி முதல் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தனியார் ஒருவர், இங்கு துறைமுகம் அமைந்தால் கடல் ஆமைகள் முட்டையிட முடியாது. கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் குறையும் என்று கூறி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சரிவர வாதிடாததால், பசுமைத் தீர்ப்பாயம் இத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு காரணமாக துறைமுகம் கட்டும்பணிகளை திமுக அரசு நிறுத்தியுள்ளது.
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக, மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை அரசு நிறுத்தியதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், நாளை (செப்.13) காலை 9 மணி அளவில், மரக்காணம் தாலுகா அலுவலகம் எதிரில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT