Published : 09 Sep 2023 07:34 AM
Last Updated : 09 Sep 2023 07:34 AM
சென்னை: பசுந்தேயிலை ஒரு கிலோவுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ.33.50-ஐ மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு,குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பசுந்தேயிலையை நம்பியே உள்ளது. தொடர்ந்து பசுந்தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், சுமார் 85 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
2001-ல் முதல்வரான ஜெயலலிதா, ஒரு கிலோ தேயிலைக்கு ரூ.2 மானியமாக வழங்கினார். நியாயவிலைக் கடைகள் மூலம் 100 கிராம் தேயிலை பாக்கெட்களை விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்கினார். இதன்மூலம் 50 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் பலனடைந்தார்கள்.
மேலும், தேயிலை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக தேயிலையை வாங்குவதற்கும், விற்பதற்கும் டி.சர்வ் என்ற ஆன்லைன் விற்பனையை, 2003-ம் ஆண்டு ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.
தற்போது உற்பத்திச் செலவு பலமடங்கு அதிகரித்த நிலையில், 1 கிலோ பசுந்தேயிலையின் விலை ரூ.12 வரை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.33.50 நிர்ணயித்து மத்திய அரசிடம் பெற்றுத்தர தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். உடனடியாக ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.10 மானியமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜி.கே.வாசன் அறிக்கை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பச்சை தேயிலையில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் சிறுதேயிலை விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய 14 வருடங்கள் திருப்பி செலுத்தக் கூடியவட்டியில்லா கடன் உதவியை தமிழகஅரசு வழங்கவேண்டும். மத்திய அரசுநிறுவனமான தேயிலை வாரியம், தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ.34 ஆக விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT