Published : 08 Sep 2023 11:13 PM
Last Updated : 08 Sep 2023 11:13 PM

”திராவிட மாடல் என்ற சொல்லை கேட்டால் பலருக்கு எரிச்சல் வருகிறது...” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை மலையாளிகள் சங்கத்தின் சார்பில் கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "என்ட பிரியப்பட்ட மலையாள சகோதரர்களுக்கு ஸ்டாலின்ட சிநேகம் நிறைஞ்ச நமஸ்காரம். சில நாட்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய மலையாள மொழிச் சொந்தங்களுக்கு, மலையாளத்தில் என்னுடைய வாழ்த்துகளைச் சொன்னேன். இதற்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் நான் மலையாளத்தில் பேசியிருக்கிறேன்.

நாம் ஒரே மொழி குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அதாவது திராவிட மொழி குடும்பத்தை சார்ந்தவர்கள். சமத்துவத்திற்கு எதிராக இருக்கக்கூடியவர்களுக்கு இன்றைக்கு ‘திராவிடம்’ என்று சொல் ஒரு எரிச்சலாகவே இருக்கிறது.

ஊடகத் துறையில் தலித் பத்திரிக்கையாளர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது. இது ஓரளவு உண்மைதான். இதனை உணர்ந்துதான் ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் இதழியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவசமாக இதழியல் பயிற்சியை லயோலா கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு வழங்கியது.

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற திராவிட மாடல் ஆட்சியின் நோக்கத்தை நான் சொல்லி வருகிறேன் என்றார். சமூக நீதி எந்தளவுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை பிரதமர் வி.பி.சிங் அமல்படுத்திய பிறகும் சமூகநீதிக்கு தடைகள் விழுந்தன. இத்தகைய சமூக நீதிக்காகத்தான் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக, இந்தியாவின் பாதுகாப்பே முக்கியம் எனப் பேரறிஞர் அண்ணா திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டார்கள். அந்நிய நாட்டால் இந்தியாவுக்கு ஆபத்து வந்த காலம் அது. வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என்று விளக்கம் அளித்து இந்த நிலைப்பாட்டை எடுத்தார் பேரறிஞர் அண்ணா. இதேபோன்றுதான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு இன்று ஆபத்து வந்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்திருக்கிறது. சமூகநீதியை சிதைக்கப் பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் சிதைப்பதன் மூலமாக இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறார்கள். இதனை அரசியல் தளத்தில் அரசியல் இயக்கங்களாகிய நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

இந்தியாவைக் காப்பாற்றும் பணியில் ஊடகங்களும் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும். ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தபிறகு 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் என்னுடைய வேதம்' என்று சொல்லி நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் வணங்கியவர் பிரதமர். இப்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதனை நாட்டிலுள்ள அனைத்து மக்களும் உணர்ந்து இந்த போக்கை எதிர்க்க வேண்டும்.

இங்கு கூடியிருக்கும் எனது மலையாள சொந்தங்களுக்கும் கேரளத்தில் வாழக்கூடிய சொந்தங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது, தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல் ஊடகங்களும், பொய் பரப்புரைகளுக்கும் திசை திருப்புபவர்களுக்கும் முக்கியத்துவம் தராமல் விடுதலைப் போராட்டக் காலத்தில் செயல்பட்டதைப் போல மீண்டும் செயல்பட வேண்டும்" என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x