Last Updated : 08 Sep, 2023 05:09 PM

45  

Published : 08 Sep 2023 05:09 PM
Last Updated : 08 Sep 2023 05:09 PM

அமைச்சர் உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதியவேண்டும்: 'புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி

மதுரை: சனாதனத்திற்கு எதிராக பேசிய விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து அமைச்சர் உதயநிதி மீது வழக்கு பதியவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவிற்கு பரமக்குடிக்கு செல்ல விடாமல், காவல்துறை கடந்த 3 ஆண்டுகளாக இடையூறு செய்கிறது. மதுரை- பரமக்குடி வரை இடையிடையே எனது வாகனம் தடுத்து நிறுத்தப்படுகிறது. இடையூறு இன்றி அஞ்சலி செலுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மது விற்பனையை வைத்துத்தான் தமிழக அரசு இயங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

பூரண மதுவிலக்கு என்பதுதான் அரசின் லட்சியம் என, திமுக கூறியது. ஆனால், அறிவிப்புக்கு மாறாக தமிழக அரசு பட்டி, தொட்டி எல்லாம் டாஸ்மாக் கடைகளை தொடங்குகிறது. மது விற்பனை காரணமாக தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பார்களை திறக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. டாஸ்மாக் கடைகளில் பார்கள் திறந்தால் அது, சட்டவிரோதமான செயல். திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதனத்தைப் பற்றி பேசுகின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு அகில இந்திய அளவில் பிரச்சினையாக மாறி உள்ளது.

சனாதனம் என்ன என்பது தெரியாமல் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். 1950 அரசியல் சாசனத்தின்படி, அனைவரும் சமம் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்து மதத்தின் ஆன்மாவாக சனாதனம் உள்ளது. இது 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கோட்பாடு. உலகத்தில் இந்து மதம் போல வேறு எந்தவொரு மதமும் கிடையாது. இந்து மதம் சுய கட்டுப்பாடு ஒழுக்கத்தை கற்றுத்தருகிறது. சனாதனம், வர்னாஸ்ரமம், சாதிய கோட்பாடு வெவ்வேறு வகைகளாக உள்ளன. சனாதனத்தை ஏற்றுக் கொண்டதால் கருணாநிதி, முக. ஸ்டாலின், உதயநிதி பதவிகள் வகிக்க முடிந்தது.

உதயநிதி கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கூறிய விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்துவாக இருந்து கொண்டே அமைச்சர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் தவறாக பேசி உள்ளனர். சனாதனம் குறித்து திட்டமிட்டே உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். உதயநிதியை மன்னிக்கக்கூடாது, தண்டிக்கவேண்டும். மக்களவை தேர்தலுக்காக உதயநிதி சர்ச்சையாக பேசியுள்ளார். திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இவற்றை மறைக்கவே சர்ச்சை பேச்சுக்களை பேசுகின்றனர். நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதியவேண்டும். இந்தியாவை இந்தியா என்றும், பாரத் எனவும் அழைக்கலாம்'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x