Published : 07 Sep 2023 05:54 AM
Last Updated : 07 Sep 2023 05:54 AM

திருவள்ளூரில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தல்

திருவள்ளூர்: விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் 16 ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில், பொதுமக்களுக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகின்றன.

ஆகவே, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தோர், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது, நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி புட்லூர் ஏரி, கூவம் -ஈசாஏரி, திருமழிசை குளம், ஊத்துக்கோட்டை குளம் மற்றும் சித்தேரி,ஊத்துக்கோட்டை அருகே கொசஸ்தலை ஆறு, திருத்தணி- காந்திகுளம், பராசக்தி நகர் குளம், ஆர்.கேபேட்டை-வண்ணான்குளம், பள்ளிப்பட்டு- கரிம்பேடு குளம், பொதட்டூர்பேட்டை-பாண்டரவேடு ஏரி, கனகம்மாசத்திரம்- குளம், பழவேற்காடு ஏரி, கும்மிடிப்பூண்டி அருகே ஏழு கண்பாலம் மற்றும் பக்கிங்காம் கால்வாய், காக்களூர் ஏரி ஆகிய 16 ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

இந்த நீர் நிலைகளில் கரைக்கும் விநாயகர் சிலைகள், களிமண் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சிலைகளின் ஆபரணங்கள், உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

விநாயகர் சிலைகள் உருவாக்கத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் மற்றும்எண்ணெய், எனாமல் மற்றும்செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

மேலும், விபரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர், காவல் துறைகண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என‌ திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x