Published : 05 Dec 2017 09:28 AM
Last Updated : 05 Dec 2017 09:28 AM

கோவை, திருச்சி, சென்னையில் உள்ள கரும்பு, வாழை, உப்புநீர் மீன் வளர்ப்பு ஆய்வு நிறுவனங்களை மூடக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கோவை கரும்பு அபிவிருத்தி நிறுவனம், திருச்சி மத்திய வாழை ஆய்வு நிறுவனம், சென்னையில் உள்ள உப்புநீர் மீன்வளர்ப்பு மத்திய அமைப்பு ஆகியவற்றை மூடுதல் அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைப்பதை கைவிட வேண்டும் என பிரதமர் மோடியை முதல்வர் கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், திருச்சியில் உள்ள மத்திய வாழை அபிவிருத்தி மையம், சென்னையில் உள்ள மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (சிபா) ஆகியவற்றை மூடுவது அல்லது நாட்டின் வேறு பகுதியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனங்களுடன் இணைப்பது என திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

கோவையில் உள்ள கரும்பு அபிவிருத்தி மையம், 1912 முதல் கரும்பு விவசாயிகளுக்காக சேவையாற்றி வருகிறது. இந்த மையம், தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெலங்கானா, ஆந்திரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய கரும்பு வகைகளை அறிமுகப்படுத்தி, விவசாயிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. இந்த மையத்தை மூடவோ, வேறு நிறுவனத்துடன் இணைக்கவோ கூடாது என்பதே தமிழக அரசின் விருப்பமாகும்.

அதேபோல, திருச்சி மத்திய வாழை அபிவிருத்தி மையம், 1993-ல் உருவாக்கப்பட்டது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளின் வாழைப்பழ தேவையையும் பூர்த்திசெய்யும் வகையில் இது செயலாற்றி வருகிறது. தமிழகம் வாழைப்பழ உற்பத்தி, ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது. இந்த மையத்தின் ஒத்துழைப்பால்தான் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. எனவே, இந்த மையத்தையும் மூடவோ, இணைக்கவோ கூடாது.

சென்னையில் உள்ள உப்புநீர் மீன்வளர்ப்பு மத்திய நிறுவனமானது, தமிழகம் மற்றும் அருகில் உள்ள மற்ற கடலோர மாநிலங்களுக்கு மீன்வளர்ப்புக்கான உதவிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இது, தமிழக மீனவ மக்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பங்களிப்பை வழங்குகிறது. சிபா அமைப்பின் ஒத்துழைப்பால் மாநிலத்தில் உள்ள மீன் வளர்ப்பாளர்கள் தொடர்ந்து அந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நோய் தாக்குதல் இல்லாத தாய் இறால்களை சென்னை விமான நிலையம் வழியாக மட்டுமே இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த இறால்கள், சென்னை சிபா மையத்தில் இருந்தே நாடு முழுவதும் உள்ள மீன் வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, இந்த மூன்று நிறுவனங்களையும் மூடுவதோ அல்லது, வேறு ஐசிஏஆர் நிறுவனங்களுடன் இணைப்பதோ, தமிழகத்தில் உள்ள விவசாயிகள், மீனவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பாக ஏற்கெனவே, மத்திய விவசாயத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். அவரது முடிவுக்காக காத்திருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x