Last Updated : 14 Dec, 2017 10:04 AM

 

Published : 14 Dec 2017 10:04 AM
Last Updated : 14 Dec 2017 10:04 AM

போலீஸாரின் குடும்பத்தை கொலை செய்வேன்: கொள்ளையன் மிரட்டல்

நகைக்கடையில் கொள்ளையடித்த நாதுராமை பிடிக்க தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். ஆனால் அவரது வீட்டில் நாதுராம் இல்லாததால், தந்தை மற்றும் உறவினர்கள் 4 பேரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நாதுராம், நகைக்கடை உரிமையாளர் முகேஷை செல்போனில் தொடர்பு கொண்டு, “எனது தந்தை மற்றும் குடும்பத்தினரை விடுதலை செய்யாவிட்டால், உன்னையும் போலீஸாரின் குடும்பத்தினரையும் கொலை செய்வேன்” என்று மிரட்டி இருக்கிறார். இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் முகேஷ் புகார் கொடுத்துள்ளார்.

நாதுராம் பேசிய செல்போன் எண்ணை வைத்து அவர் பதுங்கி இருந்த இடத்தை சென்னை போலீஸார் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து அந்த செல்போன் எண்ணின் சிக்னல்களை பின்தொடர்ந்து நாதுராமை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தானில் முகாமிட்டிருந்து தனிப்படையினருக்கு சென்னையில் இருந்து, கொள்ளையன் பதுங்கி இருக்கும் இடம் குறித்து போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

பயணச் செலவு

“சில வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க அல்லது விசாரணைக்காக வெளிமாநிலம் செல்ல வேண்டிய கட்டாயம் போலீஸாருக்கு ஏற்படும். இப்படி செல்லும் போலீஸாருக்கு பயணச்செலவு, தங்கும் வசதிகள், உணவு போன்ற விஷயங்களுக்கு அதிக பணம் செலவாகும். இந்த தொகையை பெரும்பாலும் வழக்கில் தொடர்புடைய நபரே போலீஸாருக்கு வழங்குகிறார். அரசு சார்பில் வழங்கப்படும் தொகையை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அதிகாரிகள் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

வெளிமாநிலங்களில் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது, அந்தப்பகுதி காவல் நிலையத்தில் இருந்து பெரிய அளவில் எந்த உதவியும் கிடைக்காது. வழி காட்டுவதற்கு மட்டும் கான்ஸ்டபிள் ராங்கில் இருக்கும் ஒரு நபரை உடன் அனுப்புவார்கள். மேலும் பிஹார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் உள்ள காவல் நிலையத்தில் நாம் உதவி கேட்டால், நாம் வந்திருக்கும் தகவலை சம்பந்தப்பட்ட நபருக்கே தெரிவித்து விடுவார்கள். இப்போது கூட அப்படி நடந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் தயாராக இருந்துள்ளனர்” என்று முன்னாள் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

போலீஸாரின் குமுறல்கள்

கொள்ளையர்களால் பெரியபாண்டியன் கொல்லப்பட்ட தகவல், தமிழக போலீஸாரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸார் சிலர் கூறியதாவது:

வெளிமாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க அனுப்பும்போது சிறப்பு பயிற்சி எடுத்த ஆயுதப்படை காவலர்களை துப்பாக்கிகளுடன் உடன் அனுப்ப வேண்டும். ஒரு உதவி ஆணையர் தலைமையில்தான் தனிப்படையை அனுப்ப வேண்டும். உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் கொள்ளையரை சுட்டுப் பிடிக்க எந்த தடையும் இருக்கக் கூடாது.

வெளிமாநில கொள்ளையர்களை கண்காணிக்கவும் கண்டுபிடிக்கவும் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் . அதில் பல மொழிகளில் பேசக்கூடிய காவலர்களை நியமிக்க வேண்டும். பல்வேறு மாநில கள நிலவரங்கள், சூழ்நிலைகளை அறிந்து கொள்ளவும் பல மாநில தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் தனிப்பிரிவினருக்கு வழிவகைகளை உருவாக்கித் தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு

பெரியபாண்டியனின் உறவினர் ராஜ்குமார் கூறும்போது, ‘‘பெரியபாண்டியன் எனக்கு அண்ணன் முறை வேண்டும். உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர். யார் எப்போது போனில் கூப்பிட்டு உதவி கேட்டாலும் செய்து கொடுப்பார். துணிச்சல் மிக்கவர். ராஜஸ்தானுக்கு சென்றபோதுகூட உள்ளூர் போலீஸார் அவரை இரவு நேரத்தில் கொள்ளையர்கள் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறார்கள். ஆனால், துணிச்சலுடன் சென்றார். அவருடன் 6 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அவருடன் கூடுதல் போலீஸாரை அனுப்பி இருக்க வேண்டும்.

6 பேர் மட்டுமே

ராஜஸ்தான் கொள்ளையர்கள் பற்றி சமீபத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படம் வெளியானது. அதில் கொள்ளையர்களின் அட்டூழியத்தையும் போலீஸார் படும் கஷ்டத்தையும் தத்ரூபமாக சொல்லி இருந்தனர். அதுபோன்ற பயங்கர கொள்ளையர்களை பிடிக்கச் செல்லும்போது 6 பேர் மட்டுமே சென்றது தவறு. கூடுதல் போலீஸார் சென்றிருக்க வேண்டும். திரைப்படங்களை பார்த்தாவது போலீஸார் விழித்துக் கொள்ளட்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x