Published : 06 Dec 2017 10:32 AM
Last Updated : 06 Dec 2017 10:32 AM

எழுத்தாளர்களின் படைப்புகளை பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்ய வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு வேண்டுகோள்

எழுத்தாளர்களின் படைப்புகளை பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தமிழியல் பண்பாட்டு புலத் துறை, சாகித்ய அகாடமியுடன் இணைந்து இளம் எழுத்தாளர்களுக்கு 2 நாள் பயிற்சி பட்டறைக்கு சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது. பயிற்சி பட்டறை யின் தொடக்க விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன் தலைமை வகித்தார். பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்து தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் வெ.இறையன்பு பேசியதாவது:

எழுத்தாளர்கள் தங்கள் உணர்வுகளால் எல்லா காலங்களிலும் இளைஞர்கள்தான். அவர்களின் படைப்புகள் எப்போதும்தான் இளமைதான். இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எழுத்துகள் இன்றும் உயிர்வாழ்கின்றன. எல்லா காலமும் போற்றப்படு வதும், நினைவுகூரப்படுவதும் எழுத்துக்கள்தான். அவை எப்போதும் நிலைத்துநிற்கும்.

எழுத்தாளர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. மானுட விடுதலைக்காக பாடுபட்ட எழுத்தாளர்கள் பலர். அவர்களின் கருத்துகள் பலவேளைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றன. எழுத்தில் உண்மை இருந்தால் அதை மனதில் வைத்துக்கொண்டு காலம் ஒருநாள் அந்த எழுத்தை மதிக்கும். பல எழுத்துகளில் கருத்துகள் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும். வாசிப்பாளர்களை பொருத்தே கருத்துகள் அர்த்தப்படுத்தப்படு கின்றன.

பல்கலைக்கழகம் என்பது கல்வியை வழங்குவதுடன் ஆய்வுகளிலும் ஈடுபட வேண்டும். எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளைப் பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இளம் எழுத்தாளர்கள் என சொல்லப்படும் தொடக்கநிலை எழுத்தாளர்கள், மற்றவர்களுடன் கலந்து பேசினாலே அவர்களுக்கு கதைக்கருவும், கதைக்களமும் கிடைத்துவிடும். படிப்பதை சுமையாக கருதாமல் படிப்பதை நேசிக்க வேண்டும். கல்வி என்பது கடைசிவரை தொடரக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.

இவ்வாறு இறையன்பு கூறினார்.

பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.விஜயன், சாகித்ய அகாடமி செயற்குழு உறுப்பினர் இரா.காமராசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, சாகித்ய அகாடமியின் சென்னை மண்டல பொறுப்பு அதிகாரி ஏ.எஸ்.இளங்கோவன் வரவேற்றார். தமிழியல் பண்பாட்டு புலத் துறையின் தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன் அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக, பேராசிரியர் எம். வையாபுரி நன்றி கூறினார்.

2-ம் நாளான இன்று...

முதல் நாள் பயிற்சியில், ‘தமிழ்ச் சிறுகதைகள் - படைப்பும் பார்வையும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் முகிலை ராஜபாண்டியனும், ‘மொழியும், கதையும்’ என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமியும், ‘சிறுகதை செப்பனிடுதல்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷும் கருத்துரை வழங்கினர். நிறைவு நாளான இன்று (புதன்கிழமை) நடக்கும் பயிற்சியில், ‘கற்றுத்தரும் கதைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ‘கதை - கதையாக உருவாகும் இடம்’ என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன், ‘சிறுகதை: கருவும் உருவும்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் மாலன் ஆகியோர் பேசுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x