Published : 30 Aug 2023 01:11 PM
Last Updated : 30 Aug 2023 01:11 PM

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அமலாக்கத்துறை கைது செய்திருந்த நேரத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாகவும், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுக்கக் கோரி நேற்றும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மனு புதன்கிழமையும் விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பும் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, இந்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று அறிவித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு ஆஜராகி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையிட்டனர். இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, உயர் நீதிமன்றத்தை அணுகி, இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல், இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x