Published : 05 Jul 2014 10:38 AM
Last Updated : 05 Jul 2014 10:38 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: கழுத்தில் இருந்த டாலர் மூலம் கொத்தனார் உடல் அடையாளம் தெரிந்தது

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் இறந்த கொத்தனார் ஒருவரின் உடல் அவரது கழுத்தில் கிடந்த டாலர் மூலம் அடையாளம் தெரிந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரியபணிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய கணவர் ஆர்.கருப்பையா(50). இவர்களுக்கு கஜலட்சுமி(23), காயத்ரி(21) என இரு மகள்கள் உள்ளனர். விபத்து நடந்த கட்டிடத்தில் கருப்பையா பணியாற்றியுள்ளார். ஆனால், விபத்து நடந்து 5 நாட்கள் ஆகியும் அவர் என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது. அவரது உறவினர்கள் மவுலிவாக்கத்துக்கும், ராயப்பேட்டைக்கும் தினமும் அலைந்து கொண்டு இருந்தனர். கடந்த 2 நாட்களில் சாந்தி 4 முறை மயங்கி விழுந்தார். இந்நிலையில் ஒரு உடலின் கழுத்தில் கிடந்த டாலரை வைத்து அது கருப்பையாவின் உடல்தான் என்று அடையாளம் காணப்பட்டது.

இது தொடர்பாக சாந்தி மற்றும் அவருடைய சகோதரர் சிவகங்கரன் கூறும்போது, “கட்டிட விபத்து நடந்த இடத்தில் கருப்பையா 2 மாதங்களாக கொத்தனாராக பணியாற்றி வந்தார். அவருக்கு எந்த அடையாள அட்டையும் கொடுக்கவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்து சனிக்கிழமை இரவு முதல் 5 நாட்களாக அவரைத் தேடி வந்தோம். இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று ராயப்பேட்டை மருத்துவனையில் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன. அந்த உடல்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் இருந்தன. பின்னர், ஒரு உடலின் கழுத்தில் ஓம்சக்தி டாலர் இருந்தது. இதேபோல், கையில் கருப்பு கயிறும் இருந்தது. மேலும், உடல்அமைப்பும் கருப்பையாவைப் போல் இருந்தது. இதை வைத்து தான் நாங்கள் அவரது உடலை அடையாளம் கண்டுபிடித்தோம்” என்றனர்.

சட்டையால் அடையாளம் தெரிந்தது

மதுரை திருமங்கலம் சவுடார்பட்டியைச் சேர்ந்த எம்.கருப்பையா (50) என்பவர் இந்த விபத்தில் சிக்கி பலியாகி இருந்தார். அவரது உடல் 3-ம் தேதி மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது உறவினர்களால் கருப்பையாவின் உடலை முதலில் அடையாளம் காண முடியவில்லை.

இந்நிலையில் கருப்பையாவின் தம்பி சின்னன் மற்றும் உறவினர்கள் அவரது உடலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கருப்பையா அணிந்திருந்த சட்டையை வைத்து அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

இதுகுறித்து கருப்பையாவின் தம்பி சின்னன் கூறியதாவது:

என் அண்ணன் கருப்பையா, இடிந்து விழுந்த கட்டிடத்தில்தான் தங்கி இருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் வினோத்குமார் (18) என்ற மகனும் வினிதா (16) என்ற மகளும் உள்ளனர்.

வினோத்குமார் பிளஸ்-2 தேர்வில் 1050 மதிப்பெண் எடுத்துள்ளார். வினிதாவும் பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்த பிள்ளைகளை நல்லமுறையில் படிக்கவைக்க அரசிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம்.

என் அண்ணனுக்கு கடந்த வாரம் நான் ஒரு சட்டையை வாங்கி அனுப்பினேன். அந்த சட்டை மூலம்தான் என் அண்ணன் உடலை அடையாளம் காண முடிந்துள்ளது. கடந்த 6 நாட்களாக மவுலிவாக்கத்திற்கும், ராயப்பேட்டை மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டு இருந்தேன். வெள்ளிக்கிழமையன்று தான் அவர் இறந்ததை உறுதி செய்ய முடிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x