Last Updated : 24 Aug, 2023 05:03 AM

 

Published : 24 Aug 2023 05:03 AM
Last Updated : 24 Aug 2023 05:03 AM

நிலவில் சர்வதேச விண்வெளி மையம் | இந்தியா முன்னெடுக்க வாய்ப்பு - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

கோவை: சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி, நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் வாய்ப்பை இந்தியாவுக்குப் பெற்றுத் தரும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குநரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி, இந்திய அறிவியல் துறையில் ஒரு வரலாற்று நிகழ்வு. இதன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு வாழ்த்துகள்.

2008-ல் சந்திரயான்-1 திட்டத்தின் மூலம் நமது முதல் நிலவுப் பயணம் தொடங்கியது. தென்துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதை அது உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, சந்திரயான்-2 திட்டத்தைச் செயல்படுத்தினோம். எனினும், இறுதிச் சுற்றில் பணியை நிறைவு செய்யமுடியவில்லை.

தற்போது சந்திரயான்-3 திட்டத்தில் லேண்டர் விண்கலம் நிலவுக்கு வெற்றிகரமாகச் சென்றடைந்து, திட்டமிட்டபடி தரையிறங்கியுள்ளது. எத்தகைய சிக்கலான சூழ்நிலையிலும் சிறப்பாகச் செயல்படும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்பது, இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றி மற்றும் சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட சிறிய சறுக்கல்களில் பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த விண்கலத்தைச் செலுத்தி வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளோம்.

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி, நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் முன்னெடுப்பை, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்குப் பெற்றுத் தந்துள்ளதாகவே கருதுகிறேன்.

அமெரிக்காவின் மிகப்பெரிய நிலவுத் திட்டமான ‘ஆர்டிமிஸ்’ ‘பேக் டூ மூன்’ திட்டத்தில் 3 அல்லது 4 மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலில், ஆளில்லாத விண்கலம் வெற்றிகரமாகச் சென்று திரும்பியுள்ளது. அடுத்து, இந்தியாவைப் போல லேண்டர் விண்கலத்தை சந்திரனில் இறக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மூன்றாவது கட்டத்தில், விண்கலனில் மனிதர்களை சுமந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டத்தில் இந்தியா பங்களிக்க வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x