Published : 24 Aug 2023 04:54 AM
Last Updated : 24 Aug 2023 04:54 AM

சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் சொந்த ஊரில் பொதுமக்கள் கொண்டாட்டம்

சந்திரயான்-3 திட்ட வெற்றியைக் கொண்டாடும் வகையில், விழுப்புரத்தில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்பு வழங்கிய விஞ்ஞானி வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல்.

விழுப்புரம்: சந்திரயான்-3 விண்கலம் வெற்றி கரமாக தரையிறங்கியதையடுத்து, திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் சொந்த ஊரான விழுப்புரத்தில் அவரது உறவினர்களும், நண்பர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

விழுப்புரம் காந்தி சிலை அருகில், வ.உ.சி. நகரில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலின் வீட்டில், அவரது தந்தை பழனிவேலுக்கு உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து பழனிவேலு கூறியதாவது: ரயில்வே பள்ளியில் படித்த வீரமுத்துவேல், டிப்ளமோ முடித்து வேலைக்குச் சென்றார். நன்றாகப் படிப்பவரை ஏன் வேலைக்கு அனுப்புகிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டதால், அவரை பி.இ. படிப்பில் சேர்த்தேன். கல்லூரியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்ற வீரமுத்துவேல், பின்னர் இஸ்ரோவில் நேர்முகத் தேர்வில் பங்கேற்றார். அதன் முடிவு தெரியும் வரை அவர் பதற்றமாகவே இருந்தார். பின்னர் இஸ்ரோவில் சேர்ந்து, சிறப்பாகப் பணியாற்றினார். அவர் திட்ட இயக்குநராகப் பொறுப்பு வகித்த சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தையாக, தமிழனாக, இந்தியனாகப் பெருமையடைகிறேன்.

இன்று தமிழக மக்கள் மட்டுமின்றி, இந்திய தேசம் முழுவதும் உள்ள மக்கள் மறக்க முடியாத நாளாகும். சந்திரயான்-3 திட்டத்தை பொறுப்பேற்றுக் கொண்டது முதல், விடாமுயற்சியுடன் செயல்பட்டு, திட்டத்தில் வெற்றி கண்டுள்ளார் வீரமுத்துவேல்.

தீவிர பணி காரணமாக, வீரமுத்துவேல் வீட்டுக்கு வரவில்லை. மேலும், எங்களிடம் அதிகம் பேசவும் முடியவில்லை. எனினும், நாங்கள் அவ்வப்போது தொடர்புகொண்டு, அவருடன் பேசி வருகிறோம். இவ்வாறு வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x