Last Updated : 07 Dec, 2017 11:24 AM

 

Published : 07 Dec 2017 11:24 AM
Last Updated : 07 Dec 2017 11:24 AM

திருவனந்தபுரம் மருத்துவமனையில் உள்ள 9 மீனவர் உடல்களை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காண முடிவு: லட்சத்தீவு, மகாராஷ்டிராவில் 1,092 பேர் தஞ்சம்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு திசைமாறி சென்ற மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், லட்சத்தீவு, மகாராஷ்டிரா மாநிலத்தில் 128 விசைப்படகுகளுடன் 1,092 மீனவர்கள் தஞ்சமடைந்துள்ளனர். திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள 9 மீனவர்களின் உடல்களை டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தை கடந்த 30-ம் தேதி புரட்டிப்போட்ட ஒக்கி புயல் பாதிப்பால் மின்சாரம், குடிநீர் உட்பட அடிப்படைத் தேவைகள் படிப்படியாக சீராகி வருகின்றன. தகவல் தொடர்பு இதுவரை சீராகவில்லை. அனைத்துக்கும் மேலாக கடலில் மீன்பிடிக்க சென்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், அவர்களின் 256 படகுகளும் கரைதிரும்பவில்லை என மீனவர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.

அதேநேரம் அரசு தரப்பில் 70 மீனவர்கள் வரைதான் கரைதிரும்ப வேண்டியுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். எனவே, 44 மீனவ கிராமங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளனர். இன்னும் இரு நாட்களில் இப்பணி முடிந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும்.

கேரள கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் உயிருடன் மீட்கப்பட்ட 39 பேரில், 26 பேர் ஊர் திரும்பிவிட்டனர். குமரி மாவட்டம் புதுக்கடை, ராஜாக்கமங்கலம், சின்னத்துறை, வள்ளவிளை பகுதிகளைச் சேர்ந்த 12 மீனவர்களும், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரும் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புயலில் திசைமாறியதால், லட்சத்தீவு மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 128 விசைப்படகுகளில் 1,092 மீனவர்கள் கரை ஒதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. உணவு, தண்ணீரின்றி தவிப்பதாகவும், தங்களை ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வாட்ஸ் அப் மூலம் அவர்கள் தகவல் அனுப்பி வருகின்றனர். குளச்சலைச் சேர்ந்த டென்னிஷ்பாபு என்ற மீனவர் வாட்ஸ் அப்பில் கூறும்போது, ‘படகில் எரிபொருள் இல்லாததால் கரையில் இருந்து 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளோம். எங்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்’ என கூறியுள்ளார். ஏற்கெனவே, இரயுமன்துறையைச் சேர்ந்த செர்மியாஸ், இனயம் புத்தன்துறையைச் சேர்ந்த சூசையா, தூத்துக்குடியைச் சேர்ந்த ஜீடு, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துள்ளனர். தற்போது, மார்த்தாண்டம் துறையைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடல் கேரள கடற்கரையில் ஒதுங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

டிஎன்ஏ சோதனை

திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரியில், 16 மீனவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. கேரளத்தைச் சேர்ந்த 6 பேர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் என 7 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், 9 உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அந்த உடல்களை டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மீனவர்களின் உறவினர்கள், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x