Published : 19 Aug 2023 04:43 PM
Last Updated : 19 Aug 2023 04:43 PM

அதிமுக மாநாடு | மதுரையில் போக்குவரத்து மாற்றம் - நகருக்குள் கட்சி வாகனங்கள் நுழைய தடை

அதிமுக மாநாடு நடைபெறும் மதுரை மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பேனர்கள், கொடிக் கம்பங்கள் | படம்: நா.தங்கரத்தினம்

மதுரை: அதிமுக மாநில மாநாடு மதுரை ‘ரிங்’ ரோட்டில் நாளை (ஆக.20) நடக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் வாகனங்களில் திரள வாய்ப்புள்ளதால், மாநாட்டை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் குறித்து மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு: மதுரை - கப்பலூர் செல்லும் சுற்றுச்சாலையில் வலையங்குளம் கருப்புச்சாமி கோவில் அருகில் அதிமுக மாநாடு நாளை (ஆகஸ்ட் 20) நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் கீழ்காணும் மாற்று பாதை வழியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

1. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகரிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி மற்றும் சென்னைக்கு திருமங்கலம், கப்பலூர், வாடிப்பட்டி, திண்டுக்கல் மார்க்கமாக செல்ல வேண்டும்.

2. தூத்துக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி மற்றும் சென்னை செல்வதற்கு எட்டயபுரம் வழியாக கோவில்பட்டி சென்று விருதுநகர், திருமங்கலம், கப்பலூர் வாடிப்பட்டி, திண்டுக்கல் வழியை பயன்படுத்த வேண்டும்.

3. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து மதுரை வழியாக விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் கொட்டாம்பட்டியில் இருந்து நத்தம், திண்டுக்கல், வாடிப்பட்டி, திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.

4. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக தூத்துக்குடி செல்லும் வாகனங்கள், மேலூரிலிருந்து திருவாதவூர், பூவந்தி, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை சாலை வழியாக செல்ல வேண்டும்.

5. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையிலிருந்து தூத்துக்குடி மற்றும் விருதுநகர் செல்லும் வாகனங்கள் திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை சாலை வழியாக செல்ல வேண்டும்.

6. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து மதுரை வழியாக ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் மேலூரிலிருந்து சிவகங்கை வழியாக செல்ல வேண்டும்.

7. தேனியிலிருந்து மதுரை வழியாக திருச்சி செல்லும் வாகனங்கள், நாகமலை புதுக்கோட்டையிலிருந்து வாடிப்பட்டி, திண்டுக்கல் வழியாக திருச்சி மற்றும் சென்னை செல்ல வேண்டும்.

8. தேனியிலிருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள், நாகமலை புதுக்கோட்டையிலிருந்து துவரிமான், நகரி, தனிச்சியம், அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மேலூர் வழியில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் செல்ல வேண்டும்.

9. திண்டுக்கல்லிலிருந்து மதுரை வழியாக சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் நத்தம், கொட்டாம்பட்டி, திருப்பத்தூர் வழியாக செல்ல வேண்டும்.

10. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையிலிருந்து தேனி செல்லும் வாகனங்கள் சிவகங்கையிலிருந்து மேலூர், அழகர்கோவில், சத்திரப்பட்டி, அலங்காநல்லூர், தனிச்சியம், நகரி, துவரிமான், நாகமலை புதுக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.

11.மதுரை நகர் பகுதியில் இருந்து விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் மதுரையில் இருந்து காளவாசல், துவரிமான், கப்பலூர், திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.

கட்சி வாகனங்களுக்கான கட்டுப்பாடு:

1.மாநாட்டில் பங்கேற்க வரும் கட்சியினரின் வாகனங்கள் போக்குவரத்து நெறிசலை குறைக்கும் பொருட்டு மதுரை மாநகருக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

2. திருச்சி, மேலூர் வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் மதுரை மாநகருக்குள் செல்லாமல் நான்குவழிச் சாலையில் சென்று மண்டேலா நகர் வழியாக மாநாடு திடலுக்கு செல்ல வேண்டும்.

3. திண்டுக்கல், வாடிப்பட்டி மார்க்கமாக மாநாட்டுக்கு வரக்கூடிய கட்சியினர் வாகனங்கள் தனிச்சியம், துவரிமான் வழியாக கப்பலூர் சென்று மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

4 தேனி, உசிலம்பட்டி மார்க்கமாக மாநாட்டுக்கு வரக்கூடிய கட்சியினர் வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டையிலிருந்து தோப்பூர், கப்பலூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

கார்கள் உள்ளிட்ட இதர ரக வாகனங்கள் :

1. திருச்சியிலிருந்து சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி செல்ல ராமேசுவரம் நான்கு வழிச்சாலை, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.

2. திருச்சியிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி செல்லும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மதுரை மாநகர் தெப்பக்குளம் வழியாக திருப்பரங்குன்றம், திருநகர், கப்பலூர் வழியாக செல்ல வேண்டும்.

3. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் திருச்சியிலிருந்து விருதுநகர், தென்காசி செல்லும் இலகு ரக வாகனங்கள் மேலூரிலிருந்து திருவாதவூர், பூவந்தி, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.

4. மேற்சொன்ன வழித்தடங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலையில், கனரக சரக்கு வாகனங்கள் செல்ல குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வழித்தடங்கள் வழியில் தனியார் இலகு ரக வாகனங்கள் அனுப்பப்படும்.

விமான நிலையம் செல்லும் வாகனங்கள் :

1. விருதுநகர், தென்காசி பகுதியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் கப்பலூர், தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வழியாக செல்ல வேண்டும்.

2. தூத்துக்குடியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் எட்டையபுரம், கோவில்பட்டி, விருதுநகர் திருமங்கலம், கப்பலூர், திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வழியில் செல்ல வேண்டும்.

3. மேலூரிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் ஒத்தக்கடை, மதுரை மாநகர், மாட்டுத்தாவணி வழியாக தெற்குவாசல், அவனியாபுரம் சென்று விமான நிலையம் செல்ல வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x