Published : 10 Dec 2017 10:57 AM
Last Updated : 10 Dec 2017 10:57 AM

ரஷ்ய புரட்சி தற்போதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு புகழாரம்

நூற்றாண்டைக் கடந்தும் ரஷ்ய புரட்சி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தலைவருமான ஆர். நல்லகண்ணு கூறியுள்ளார்.

ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் மற்றும் புகைப்படக் கண்காட்சி சென்னை பிராட்வேயில் உள்ள ஜீவா அரங்கில் நேற்று நடைபெற்றது. அதனை தொடங்கிவைத்து ஆர். நல்லகண்ணு பேசியது:

நவீன உலகின் மீது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ரஷ்ய புரட்சி. அதை, இந்தியாவில் முதன் முதலில் வரவேற்றவர்கள் தமிழர்கள். மகாகவி பாரதி, யுகப் புரட்சி என்று புகழாரம் பாடினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்காத காலத்தில், 1922-ல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ரஷ்ய புரட்சியை பாராட்டியும், உலக கம்யூனிஸ்ட் இயக்கம் சார்பாக வாழ்த்தும் தெரிவித்தவர் தமிழர் சிங்காரவேலர். நூற்றாண்டைக் கடந்தும், உலகம் முழுவதும் அப்புரட்சி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், நாடுகளின் புரட்சியாளர்களுக்கும் ஆதர்ஷமாக உள்ளது என்றார்.

முன்னாள் எம்பி பெ.லிங்கம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கப் பொதுச்செயலாளர் மூ.வீரபாண்டியன் கருத்துரை நிகழ்த்தினர். நிர்வாகிகள் எம்.எஸ். மூர்த்தி, கீ.சு.குமார், க.சுப்பிரமணி, எஸ்.கே.சிவா, எஸ்.பாஸ்கர், லி. உதயகுமார், அசரப்அலி தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. "புயலால் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும். உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் மற்றும் விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் குடிசைப் பகுதி மக்களை மாநகரத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட்டு, அருகிலேயே மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x