Last Updated : 18 Aug, 2023 12:52 AM

 

Published : 18 Aug 2023 12:52 AM
Last Updated : 18 Aug 2023 12:52 AM

கோவை | பணியிட மாறுதல் கோரி குழந்தையுடன் காலில் விழுந்த ஓட்டுநர் - உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர்

தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சர் சிவசங்கரின் காலில் நேற்று விழுந்த ஓட்டுநர் கண்ணன்.

கோவை: தனது 6 மாத குழந்தையுடன் கோவையில் போக்குவரத்துத்துறை அமைச்சரின் காலில் விழுந்த ஓட்டுநருக்கு சொந்த ஊருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கண்ணன் தனது மனைவி, குழந்தைகளுடன் கோவையில் வசித்து வந்த நிலையில், அவரது மனைவி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

எனவே, குழந்தைகளை பராமரிக்க சொந்த ஊரில் உள்ள தனது தாய், தந்தையரிடம் ஒப்படைத்துவிட்டு கண்ணன் கோவையில் பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது சொந்த ஊர் சென்று குழந்தைகளை பார்த்து வந்தார். இதனால், குழந்தைகளை கவனிக்க கண்ணனால் இயவில்லை. எனவே, தனது சொந்த ஊருக்கு பணியிடமாறுதல் வழங்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர், பொது மேலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் தற்போது பணியிட மாறுதல் வழங்க இயலாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், போக்குவரத்துத்துறை சார்பில் நேற்று (ஆக.17) கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார். அப்போது, நிகழ்ச்சி மேடையில் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் கண்ணன் விழுந்து பணியிடமாறுதல் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் நேற்று பிறப்பித்த உத்தரவில், “கோவை அரசு போக்குவரத்துக்கழகத்தில் சுங்கம்-1 கிளையில் ஓட்டுநராக பணிபுரியும் பி.கண்ணன், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக மதுரை மண்டலத்துக்கு மாறுதல் கோரினார். அவரை திண்டுக்கல் மண்டல தேனி கிளைக்கு மாற்ற இசைவு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாறுதல் செய்து உத்தரவிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கண்ணன் கூறும்போது, “எனது கோரிக்கையை ஏற்று உடனடியாக பணயிடமாறுதல் வழங்க நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும், அமைச்சருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x