Last Updated : 17 Aug, 2023 11:50 PM

1  

Published : 17 Aug 2023 11:50 PM
Last Updated : 17 Aug 2023 11:50 PM

தமிழகத்தில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் திட்டம் இல்லை - உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: தமிழகத்தில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் திட்டம் இதுவரை இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பாபநாசம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தாமிரபரணி ஆற்று பாசனம் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தாமிரபரணியில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து வடக்கு கொடை மேலழகன் கால்வாய், தெற்கு கொடை மேலழகன் கால்வாய், நதியுண்ணி அணைக்கட்டு மற்றும் கன்னடியான் கால்வாய் வழியாக 18,090 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு 3015 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என ஜூலை 18-ல் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பு அடிப்படையில் தண்ணீரும் திறக்கப்பட்டது. ஆனால் 15 நாளில் திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த தண்ணீரை நம்பி நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் நிறுத்தத்தால் சுமார் 30 ஆயிரம் விவசாய குடும்பங்கள் செய்வது அறியாமல் தவிக்கின்றன. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வடக்கு கொடை மேலழகன் கால்வாய், தெற்கு கொடைமேலழகன் கால்வாய், நதியுண்ணி அணைக்கட்டு, கன்னடியன் கால்வாய்களில் மீண்டும் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "ஏற்கனவே நீர்நிலைகளை பாதுகாக்க நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நதிகளை இணைப்பதற்கான சாத்தியம் குறித்து ஆய்வு செய்ய குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பிரச்சினைகள் வந்திருக்காது. மழைக்காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழகத்தில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை" என அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர் விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x