Published : 12 Aug 2023 02:27 AM
Last Updated : 12 Aug 2023 02:27 AM

திருவண்ணாமலை கிரிவல பகுதியில் அசைவ உணவகங்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலையின் தொலைதூர பகுதிகள் உட்பட நான் மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தில் மாணவர்கள், இயற்கை விவசாயிகள், சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொழில்முனைவோர் உள்ளிட்டோர், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் நிறுவன தலைவர்கள், பழங்குடியின தலைவர்கள், கலாசார மற்றும் மத தலைவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களை சந்தித்தேன். அவர்களின் எதிர்பார்ப்புகள், கவலைகள் பற்றி கிடைத்த நேரடி அனுபவம் மிகவும் ஆழமானது. வளர்ந்து வரும் புதிய இந்தியாவின் வேகம், துடிப்பு மற்றும் சவால்களுக்கு ஏற்றவாறு நமது இளைஞர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். ஒரு எதிர்மறை சக்தியாக நிலவும் ஊழல்கள் மீதான அவர்களின் ஆழ்ந்த அக்கறை, அவர்களின் உயர்நிலை கனவுகளுக்கு இடையூறாக உள்ளதாக தோன்றுகிறது.

நீடித்த வேளாண்மைக்கு இயற்கை விவசாயிகள் பாராட்டத்தக்க சேவையை வழங்கி வருகின்றனர். தங்கள் தன்னார்வ அமைப்புகள் மூலம் ஏராளமான நீர்நிலைகளை மீட்டெடுத்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொழில்முனைவோர்களின் செயல்கள், நல்ல நோக்கத்துக்காக சேரும் சமூகம் சக்தி வாய்ந்தது என்ற எனது நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.

கிராமப்புற மேம்பாட்டுக்கான சமூகம் என்ற காந்திய மதிப்புகளை ஆழமாக கொண்டுள்ள அரசு சாரா அமைப்பு கடந்த நாற்பது ஆண்டுகளாக ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தரமான கல்வி மற்றும் சுய உதவி குழுக்களுக்கு சேவையாற்றி வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

அருணாசலேஸ்வரர் கோயிலின் அருகாமையிலும் கிரிவல பகுதியிலும் போதிய கழிவறைகள் இல்லாததை அறிந்தும் அசைவ உணவு விற்கும் உணவகங்கள் இருப்பதை பார்த்தும் வருத்தமடைந்தேன். இதுதொடர்பாக பக்தர்கள் தங்கள் மன வேதனையை பகிர்ந்து கொண்டனர். உணவு என்பது முழுக்க முழுக்க ஒருவரது தனிப்பட்ட விருப்பம் என்று நான் நம்புகிறேன். அது அவ்வாறே இருக்க வேண்டும். அதே சமயம் அருணாசலேஸ்வரரின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x