Published : 03 Nov 2017 10:51 AM
Last Updated : 03 Nov 2017 10:51 AM

தமிழக அரசு ஒதுக்கீடு செய்தும் விவசாயிகளைச் சென்றடையாத ரூ.21 கோடி வறட்சி நிவாரணம்

ஈரோடு மாவட்டத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.83.56 கோடி அறிவிக்கப்பட்ட நிலையில், கள ஆய்வு மற்றும் உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க முடியாததால், ரூ.21 கோடி வறட்சி நிவாரணம் விவசாயிகளை சென்றடையவில்லை.

பருவமழை பொய்த்துப்போனதால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கடும் வறட்சி நிலவியது. வறட்சி காரணமாக இரு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவமும் நடந்தது. இந்நிலையில், வணிகவரித்துறை ஆணையர் சந்திரமவுலி தலைமையிலான அதி காரிகள் குழுவினர், வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் வறட்சி பாதிப்பு குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.

இதன் அடிப்படையில் வறட்சி நிவாரணம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வறட்சியால் பயிர் சேதம் அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரத்து 931 விவ சாயிகளுக்கு, மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதமும், பாசன வசதி கொண்ட நிலங்களில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 465 வீதமும், நிலையான மரவகை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 287 வீதமும் வறட்சி நிவாரணம் வழங்குவதற்காக அரசு ரூ.83.56 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டது. இதில் முதல் கட்டமாக ரூ.57.59 கோடி விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், வறட்சி நிவாரணம் கிடைக்காத விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்க கடந்த ஜூன் மாதம் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே விண்ணப்பித்து நிவாரணம் கிடைக்காத விவசாயிகளும், ஜூன் மாதம் விண்ணப்பித்த விவசாயிகளும், நிவாரணத்தொகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆட்சியர் அறிவிப்பு

இந்நிலையில், அக்டோபர் 27-ம் தேதி நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் எஸ்.பிரபாகர், நவம்பர் 1-ம் தேதிக்குள், விடுபட்ட விவசாயிகளுக்கு ரூ.4.28 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், நேற்று வரை, இதற்கான அரசாணை பிறக்கப்படாத நிலையில், இத்தொகை விவசாயிகளைச் சென்றடையாத நிலை உள்ளது.

ஈரோடு மாவட்டத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.83.56 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக ரூ.57.59 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பின்படி, ரூ.25.97 கோடி வறட்சி நிவாரணம் இன்னும் வழங்க வேண்டிய தொகையாகும். ஆனால், தற்போது வெறும் ரூ.4.28 கோடி மட்டுமே வறட்சி நிவாரணம் வழங்கபடவுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன்படி, அரசு அறிவித்த வறட்சி நிவாரணத் தொகையில் ரூ.21 கோடி வரை விவசாயிகளைச் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘ வறட்சி நிவாரணம் குறித்த கணக்கெடுப்பின்படி, அரசு ரூ.83.56 கோடியை வறட்சி நிவாரணமாக அறிவித்தது. ஆனால், அதன் பின் வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தியதன் அடிப்படையில், நிவாரணம் பெற தகுதியான விவசாயிகள் பட்டியல் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 8000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில், ரூ.4.28 கோடி வறட்சி நிவாரணம் விரைவில் சேர்க்கப்படவுள்ளது’ என்றனர்.

சான்றிதழ் பிரச்சினை

இதுகுறித்து காலிங்கராயன் மதகு பாசன விவசாயிகள் சபை செயலாளர் ஆர்.செல்வகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியது:

விவசாயிகளிடம் வங்கிக் கணக்கு இல்லாதது, பரம்பரை சொத்தாக உள்ள நிலத்தில் விவசாயம் செய்தது, பட்டா மாறுதல் செய்ய முடியாதது, நீதிமன்ற வழக்கில் உள்ள நிலம், நிலம் தொடர்பான ஆவணங்கள் விவசாயிகளிடம் இல்லாதது என பல காரணங்களால் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கவில்லை. ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 1.69 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க அரசு நிதி ஒதுக்கினாலும், சிட்டா, அடங்கலில் பெயர் விவரம் இல்லை என்பதுள்ளிட்ட காரணங்களால், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏராளமான விவசாயிகளின் பெயர்களை, நிவாரணம் பெற வருவாய்துறையினர் பரிந்துரைக்கவில்லை.

வறட்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி முத்துசாமியின் மகன் கணேசனுக்கு கூட, 20 சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்ட மஞ்சளுக்கு மட்டும் ரூ .850 மட்டுமே நிவாரணமாக கிடைத்துள்ளது. விவசாயிகளின் அறியாமையாலும், அரசுத்துறைகளிடம் சான்றிதழ்களைப் பெறுவதில் ஏற்படும் சிரமங்களும், நியாயமாக விவ சாயிகளுக்கு சென்று சேர வேண்டிய ரூ.21 கோடி வறட்சி நிவாரணத்தைப் பறித்து விட்டது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x