Published : 07 Nov 2017 11:11 am

Updated : 07 Nov 2017 11:19 am

 

Published : 07 Nov 2017 11:11 AM
Last Updated : 07 Nov 2017 11:19 AM

தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் காலமானார்

தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரும் தொலைக்காட்சிகளில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை எளியமுறையில் நடத்தி மக்களிடம் தமிழறிவை பரப்பி வந்தவருமான பேராசிரியர் மா.நன்னன் (94) சென்னையில் காலமானார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் எனும் ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற அவர் தமிழ் மீது கொண்ட அளவு கடந்த பற்றால், தன் பெயரை ‘நன்னன்’ என மாற்றிக் கொண்டார்.


கல்லூரியில் பயின்றபோது ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றார். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே சென்னை பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட், பி.ஏ., எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். தொல்காப்பியம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். உயர்நிலைப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றினார்.

பின்னர் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றினார். 1942 முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளர் இயல் ஆகியன குறித்து பல மேடைகளில் பேசியுள்ளார். வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.

எழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையையே உருவாக்கியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழக வாயிலாக இவர் கற்றுக்கொடுத்த முறையை கோலாலம்பூர், லண்டனில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. சென்னைத் தொலைக்காட்சியில் ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் 17 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார்.

அதில் ‘உங்களுக்காக’ என்ற தொடரில் 60-க்கும் மேற்பட்ட குறு நாடகங்களை எழுதி, இயக்கியதோடு நடித்தும் உள்ளார். கட்டுரைகள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணைப்பாட நூல்கள் என நிறைய எழுதியுள்ளார். 1990 - 2010-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 70 நூல்களை எழுதினார்.

‘உரைநடையா? குறைநடையா?’, ‘எல்லார்க்கும் தமிழ்’, ‘தவறின்றி தமிழ் எழுதுவோம்’, ‘திருக்குறள் மூலமும் விளக்க உரையும்’, ‘பைந்தமிழுரைநடை நைந்திடலாமா?’, ‘வாழ்வியல் கட்டுரைகள்’, ‘தமிழ் எழுத்தறிவோம்’, ‘கல்விக் கழகு கசடற எழுதுதல்’ உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டிருந்த இவர், அதைக் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.

இவற்றில் ‘பெரியாரைக் கேளுங்கள்’ என்ற நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. தமிழக அரசின் சமூக சீர்திருத்தக் குழுத் தலைவராகவும், அஞ்சல்வழிக் கல்லூரியின் முதல்வராகவும் செயல்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கும் வாக்கியங்களை முறையாக அமைப்பதற்குமான சிறந்த ஆலோசனைகளை வழங்கியதோடு, தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள நிறை குறைகளையும், குறைகளைத் தவிர்ப்பதற்கான தீர்வுகளையும் அந்நிகழ்ச்சியில் அலசி ஆராய்ந்தார். பெரியார் விருது, தமிழ்ச்செம்மல் விருது, திரு.வி.க. விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த அவர் முதுமை காரணமாக இன்று காலை (நவம்பர் 7- 2017) காலமானார். அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author