Published : 05 Aug 2023 06:02 AM
Last Updated : 05 Aug 2023 06:02 AM

குடியரசு தலைவர் முர்மு இன்று தமிழகம் வருகை - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மசினகுடி / சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, கர்நாடக மாநிலம் மைசூரு வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் முதுமலை அடுத்த மசினகுடியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

அங்கிருந்து, தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு காரில் செல்கிறார். அங்கு, பழங்குடியின மக்கள் மற்றும் ‘தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளியை சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார். மீண்டும் காரில் மசினகுடி வந்து, ஹெலிகாப்டரில் மைசூரு திரும்புகிறார்.

அங்கிருந்து விமானத்தில் இரவு 6.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் குடியரசுத் தலைவரை ஆளுநர் ஆர்.என்.ரவி. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். 7 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வருகிறார். இரவு விருந்து முடித்து அங்கு தங்குகிறார்.

நாளை (ஆக.6) காலை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165–வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மாலை 7 மணிக்கு ஆளுநர் மாளிகை தர்பார் அரங்குக்கு ‘பாரதியார் அரங்கம்’ என்று பெயர் சூட்டும் விழாவில்பங்கேற்கிறார். 8 மணிக்கு ஆளுநர் அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்கிறார். அழைப்பை ஏற்று, முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்களும் இதில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x