Published : 29 Nov 2017 11:53 AM
Last Updated : 29 Nov 2017 11:53 AM

ரகுவை கொன்றது யார்? - சர்ச்சை வாசகம் எழுதிய இளைஞர்களிடம் விசாரணை: அறிவுறுத்தி, பாராட்டி அனுப்பிய போலீஸார்

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி, விபத்துக்குள்ளாகி அமெரிக்க வாழ் பொறியாளர் ரகு பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு விபத்தாக மட்டுமே கடந்துபோக இருந்த இந்த சம்பவத்தை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கியது ‘ரகுவை கொன்றது யார்’ (WHO KILLED RAGHU?) என்ற வாசகம்.

விபத்து நடந்த மறுநாள், அலங்கார வளைவு அகற்றப்பட்டதும் இந்த வாசகம் கோவை அவிநாசி சாலையில் எழுதப்பட்டது. அதுவரை மக்கள் மனதில் அடைபட்டுக் கிடந்த ஒட்டுமொத்த கேள்வியாக இது வெளிப்பட்டது. ஆளும் கட்சியினரையும், அதிகாரிகளையும் பதற்றக்குள்ளாக்கியது. அத்தோடு, சமூக வலைத்தளங்களில் பரவி ரகுவைக் கொன்றது யார்? என்ற வாசகம் ஹேஷ்டேக் ஆனது. வாசகத்தை அழித்ததும் கூட இன்றும் அப்பிரச்சினையை விவாதப் பொருளாக வைத்திருக்கிறது.

இப்படி அரசின் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கிய அந்த வாசகத்தை எழுதியது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருந்தது. ரகுவின் உறவினர்கள், நண்பர்கள் அல்லது அரசியல் கட்சியினர் யாரேனும் எழுதியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாரும் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கோவை பீளமேடு காவல்நிலையத்துக்கு நேற்று இரண்டு இளைஞர்கள் வந்தனர். ரகுவின் மரணம் குறித்த சர்ச்சையான வாசகத்தை எழுதியது தாங்கள்தான் என ஒப்புக்கொண்டனர். தேடிச் சென்று விசாரிக்க வேண்டிய போலீஸாரோ வாயடைத்து நின்றனர். இருவர் மீதும் புகார் எதுவும் இல்லை என்பதால், பிரச்சினையின் தீவிரத்தை மட்டும் கூறி இனிமேல் இப்படி எதுவும் செய்யவேண்டாம் என அறிவுறுத்தி அனுப்பினர். அதற்குள்ளாக இருவரது பெற்றோரும், வழக்கறிஞர்களும் அங்கு வந்தனர். ஊடகங்களை சந்திக்க விரும்பவில்லை எனக் கூறி இரு இளைஞர்களும் வெளியேறினர்.

அவர்களது வழக்கறிஞரிடம் கேட்டபோது, ‘ஒருவர் சென்னை ஐஐடியில் படித்தவர். மற்றொருவர் சொந்தமாக தொழில் செய்கிறார். இவரும் பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் பேச முடியாத நிலையில் உள்ளதாலேயே ஊடகங்களை சந்திக்கவில்லை. மற்றபடி இருவரையும் போலீஸாரே பாராட்டினர். சாலையில் எழுதியதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா என்ற அடிப்படையில் விசாரித்தனர். விபத்து ஏற்படும் வகையில் அலங்கார வளைவு அமைத்ததைக் கண்டித்துதான் எழுதினோம் என இருவரும் தெரிவித்தனர்’ என்றார்.

இரு இளைஞர்களும், இறந்த ரகுவுக்கு ரத்த சொந்தமும் இல்லை, நண்பர்களும் இல்லை. இறந்த நபர் யார் என்றே அவர்களுக்குத் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x