

சேதப்படுத்திய என்எல்சி - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு: என்எல்சி நிர்வாகத்தால் விளைநிலங்களில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்காக, ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்தத் தொகையை வரும் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது,"நெல்லுக்குப் பதிலாக தக்காளி பயிரிட்டிருந்தால், கூடுதல் இழப்பீடு கிடைத்திருக்கும்” என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "தக்காளி பயிரிட்டிருந்தால், அரசே அதை கொள்முதல் செய்திருக்கும்" என்று தெரிவித்தார். இதனால் உயர் நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.
‘ஓபிசி உள் இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்துக’- ராமதாஸ்: “மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஓபிசி உள் இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடன் சுமை: அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி ஒப்பீட்டு பதில்: “வருமானத்தில் 20 சதவிகிதத்தை வட்டிக்கு மட்டுமே செலவு செய்கிற நிலையில்தான் மோடி ஆட்சியின் நிதி நிர்வாகம் அவல நிலையில் உள்ளது. ஒவ்வொரு குடிமகன் மீதும் இவ்வளவு கடனை சுமக்க வைப்பது தான் மோடி மாடல் ஆட்சியா?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு: நிறுவனங்களின் மனு தள்ளுபடி: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை - மதுரை தேஜஸ் விரைவு அப்டேட்: சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மறு அறிவிப்பு வெளியாகும் வரை, இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஹரியாணா கலவரம் எதிரொலி: டெல்லியில் பலத்த பாதுகாப்பு: ஹரியாணாவில் திங்கள்கிழமை வெடித்த மதக் கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. போலீசார் இதுவரை 116 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன், 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹரியாணாவில் நடந்த வகுப்புவாத வன்முறையானது, தலைநகர் டெல்லியில் இருந்து 20 கிமீ தள்ளியுள்ள குருகிராம் வரை எட்டியுள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்த வன்முறையில் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதன் காரணமாக டெல்லியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குருகிராம் பகுதியில் நடந்த வன்முறையினைத் தொடர்ந்து அங்குள்ள பெட்ரோல் பங்க்-களில் வாகனங்களுக்கு இல்லாமல், பாட்டில்கள் கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதற்கு குருகிராம் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘பேரணிகளில் வெறுப்புப் பேச்சு, வன்முறை கூடாது’: ஹரியாணா வன்முறையைக் கண்டித்து வலதுசாரி அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், போராட்டங்களில் வெறுப்புப் பேச்சு, வன்முறைக்கு இடம் இல்லாமல் கண்காணிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.
சட்டப்பிரிவு 370 ரத்து மீதான விசாரணை - கபில் சிபல் வாதம்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. இதுதொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது விசாரணையைத் தொடங்கியது.
இனி இந்த விசாரணை, திங்கள்கிழமைகள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்களில் தினசரி அடிப்படையில் நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். முன்னதாக, எழுத்துபூர்வ அறிக்கைகளை தாக்கல் செய்ய ஜூலை 27-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வ வாதத்தை அறிக்கைகளாக ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் வாதம் புதன்கிழமை தொடங்கியது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இது ஒரு வரலாற்றுத் தருணம்” என குறிப்பிட்டார்.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்த இந்த வழக்கில் 4 சட்ட அம்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்திய அரசியல் சாசனம், இந்திய அரசியல் சாசனம் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தக்கூடிய விவகாரம், ஜம்மு காஷ்மீருக்கான அரசியல் சாசனம் மற்றும் சட்டப்பிரிவு 370 ஆகியவையே அவை என்று தனது வாதத்தில் கபில் சிபல் குறிப்பிட்டார்.
கனமழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் சீன தலைநகரம்: சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்ததை அடுத்து, 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட நேரில் வலியுறுத்தல்: மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலையிட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அப்போது ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மணிப்பூர் சென்று வந்த எம்.பி.கள் குழு அங்குள்ள நிலைமையை குடியரசுத் தலைவரிடம் விளக்கினர்.