Published : 02 Aug 2023 05:32 PM
Last Updated : 02 Aug 2023 05:32 PM

ஹரியாணா கலவரத்துக்கு எதிரான பேரணிகளில் வெறுப்புப் பேச்சு, வன்முறை கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை

ஹரியாணா வன்முறை | கோப்புப்படம்

புதுடெல்லி: ஹரியாணா வன்முறையைக் கண்டித்து வலதுசாரி அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், போராட்டங்களில் வெறுப்புப் பேச்சு, வன்முறைக்கு இடம் இல்லாமல் கண்காணிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

ஹரியாணா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் திங்கள்கிழமை பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரை என்ற பெயரில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் இரு தரப்பினருக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்தது. இதில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். இந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து வலதுசாரி அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்புகள் புதன்கிழமை டெல்லியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘நூ பகுதியில் நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளது. எந்த ஒரு சின்ன ஆத்திரமூட்டக்கூடிய பேச்சும் பெரும் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதங்களுக்கு வழிவகுக்கலாம். இந்த அடிப்படை உண்மைகளைக் கருத்தில் கொண்டு வகுப்புவாத தீயைத் தூண்டும் மற்றும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் இதுபோன்ற பேரணிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், புதன்கிழமை டெல்லியில் மட்டும் 23 போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக மேற்கோள் கட்டப்பட்டது.

இந்த அவசர கோரிக்கை முதலில் உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்த போஸ் முன்பு குறிப்பிடப்பட்டது. அப்போது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிபதி போஸ், இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை அணுகுமாறு வழிகாட்டினார். அப்போது, விதி 370 ரத்து குறித்த அரசியல் சாசன அமர்வில் காஷ்மீர் சிறப்புரிமை வழக்கை அவர் விசாரித்துக் கொண்டிருந்தார். இருந்தபோதிலும் தேவையான வழிகாட்டுதலை வழங்கினார்.

வலதுசாரி அமைப்பினர் போராட்டம் நடத்தலாம் என்றும், ஆனால் போராட்டம் மற்றும் பேரணியில் வெறுப்புப் பேச்சு, வன்முறை இடம்பெறாமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்தவைத்தது.

மனு மீதான விசாணையின்போது, "எந்த ஒரு சமூகத்துக்கும் எதிரான வெறுப்புப் பேச்சுக்கள், வன்முறைகள் இடம்பெறவில்லை என்று காவல் துறையுடன் இணைந்து அரசு உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் கூடுதல் படை, துணை ராணுவப் படையை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தேவைப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி ஊர்வலத்தை கண்காணி்க்கலாம், தேவைப்பட்டால் வீடியோ பதிவு செய்யலாம். கண்காணிப்பு கேமரா பதிவுகள் பாதுகாக்கப்படும்" என்று தெரிவித்தார். மேலும் டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

முன்னதாக, ஹரியணாவின் நூ பகுதியில் நடந்த வன்முறையைக் கண்டித்து தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் கண்ட போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேவாட் பகுதியில் நடந்த வன்முறையைக் கண்டித்து விஸ்வ இந்து பரிஷித் அமைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், வலதுசாரி அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷித் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் மானேசர் பகுதியில் உள்ள பீசம் மந்திரில் மகா பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

கலவரத்தின் பின்புலம்: ஹரியாணா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரை என்ற பெயரில் ஊர்வலம் நடைபெற்றது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் நூ மாவட்டத்திலுள்ள நள்ஹார் மகாதேவ் கோயிலில் முடிவடைவதாக இருந்தது. கேட்லா மோட் பகுதிக்கு ஊர்வலம் சென்றபோது மற்றொரு மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கினர். இதையடுத்து இரு தரப்பினருக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்தது. ஒரு கும்பல் போலீஸாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தது. மேலும், துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுக்கொண்டனர்.

இதில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். இந்த வன்முறையில் இருந்து தப்புவதற்காக 2,500 பேர் அருகில் உள்ள கோயில் ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்களை போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x