‘சென்னை - மதுரை தேஜஸ் விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் நின்று செல்லும்’

தேஜஸ் விரைவு ரயில் | கோப்புப்படம்
தேஜஸ் விரைவு ரயில் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மறு அறிவிப்பு வெளியாகும் வரை, இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு தேஜஸ் விரைவு ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு ரயில் சென்னை மதுரை இடையிலான 493 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரத்தில் சென்றடைகிறது. இதனால், பொதுமக்கள் பலரும் இந்த விரைவு ரயிலை பயன்படுத்தி வந்தனர். இந்த தேஜஸ் விரைவு ரயில், தாம்பரத்தில் நிற்காது. இதனால், இந்த விரைவு ரயிலில் பயணிக்கும் பயணிகள், எழும்பூர் வந்து அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால், இந்த விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரி வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 26ம் தேதி முதல் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று அறிவித்தது. அதாவது தற்காலிகமாக 6 மாத காலம் பிப்ரவரி 26 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தாம்பரத்தில் இருந்து தேஜஸ் விரைவு ரயிலை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. எழும்பூரில் இருந்து தேஜஸ் விரைவு ரயில் புறப்பட்டுச் செல்லும்போது, 25 முதல் 40 சதவீத இருக்கைகள் காலியாகவே இருந்தன. தாம்பரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல துவங்கியதிலிருந்து இருக்கைகள் முழுவதும் நிரம்பின.

தென்னக ரயில்வேயின் தற்காலிக அறிவிப்பு ஆகஸ்ட் 26ம் தேதியுடன் முடிவடைவதால், கடந்த சில நாட்களாக ஆக.27ம் தேதிக்குப் பிறகு பயணிகளால் தேஜஸ் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யமுடியாத சூழல் நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மறு அறிவிப்பு வெளியாகும் வரை, இனி தாம்பரத்தில் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து முன்பதிவு செய்வதற்கான வசதிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in