Published : 02 Aug 2023 04:21 AM
Last Updated : 02 Aug 2023 04:21 AM

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆக.7-ல் திமுக அமைதி பேரணி

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 7-ம்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

தமிழகத்தில் 6 முறை முதல்வராகவும், திமுகவின் தலைவராக 50 ஆண்டுகளுக்குமேல் இருந்த கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் தற்போது நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினம்வரும் 7-ம் தேதி அனுசரிக்கப்படு கிறது. இதை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து திமுகவின் சென்னை மாவட்ட செயலாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு: கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணி புறப்படுகிறது. பேரணி வாலாஜா வழியாக சென்று, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதிநினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.

அமைதிப் பேரணியில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைக்கழக செயலாளர்கள் உள்ளிட்டோர், பல்வேறு அணிகள், குழுக்களின் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x