Last Updated : 01 Aug, 2023 09:16 PM

 

Published : 01 Aug 2023 09:16 PM
Last Updated : 01 Aug 2023 09:16 PM

கொல்லிமலை வல்வில் ஓரி விழா | அருவிகளில் குளிக்க தடை; சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா மஞ்சப்பை கொடுது்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நாமக்கல்: கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு அங்குள்ள அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உத்திரவிட்டிருப்பது சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்குள்ள வியாபாரிகளை கடும் அதிருப்தியடையச் செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பல்வேறு சிறப்புகளை கொண்டது. அதில் முக்கியமானது கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார் என்பதாகும். இதை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொல்லிமலையில் ஆகஸ்ட் மாதம் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். வில்வித்தையில் அவர் சிறந்து விளங்கியதால் விழா சமயத்தில் வில் வித்தைப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.

இந்த விழாவுக்கு வழக்கத்தைக் காட்டிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்வர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் வல்வில் ஓரி விழா நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பதுடன் மலையில் உள்ள சுற்றுலாத் தளங்களும் செல்வர். குறிப்பாக மலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவிகளுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி நீர்வீழ்ச்சி பகுதிகளில் கொல்லிமலை விளைபொருட்கள் அதிகளவு விற்பனை செய்யப்படும். அவற்றை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வர்.

இதில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் வருவாய் காட்டிலும் இரு தினங்களில் நடைபெறும் விற்பனை மூலம் சற்று அதிகமான வருவாய் கிடைக்கும். இதனால் அங்கு விற்பனையில் ஈடுபடும் கொல்லிமலை சார்ந்த வியாபாரிகள் மகிழ்சியடைவர்.இந்நிலையில் இந்தாண்டுக்கான வல்வில் ஓரி விழா புதன்கிழமை தொடங்கி 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வழக்கத்துக்கு மாறாக மேற்குறிப்பிட்ட அருவிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது சுற்றுலாப் பயணிகளை மட்டுமன்றி விழாவை முன்னிட்டு கொல்லிமலையின் விளை பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது. அதேவேளையில் அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும், குளிப்பதற்கும் அனுமதியளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் கே.ராஜாங்கம் கூறியதாவது: "பாதுகாப்பு கருதி அருவிகளுக்கு செல்லவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் வருவதே தடைவிதிப்புக்கான காரணம். கடந்த ஆண்டும் இதுபோல் தடை விதிக்கபப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x