Published : 01 Aug 2023 07:32 AM
Last Updated : 01 Aug 2023 07:32 AM

ஆதிதிராவிடர் நிதியை பிற திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை - தமிழக அரசு விளக்கம்

சென்னை: ஆதிதிராவிடருக்கான நிதியை பிறதிட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடியில், ரூ.1,540 கோடி பட்டியல் இனத்தவருக்கானது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த, ஆதிதிராவிடர் துணைத் திட்ட நிதியைப் பயன்படுத்தி உள்ளதாக தேசிய பட்டியல் இனத்தினருக்கான ஆணையத்தில் ஒருவர் புகார் அளித்தார். இதுகுறித்த விளக்கங்களை ஆணையம் தமிழக அரசிடம் கேட்டிருந்தது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு முறையைப் பற்றிய தவறான புரிதலின் காரணமாகத் தான் இந்த புகார் எழுந்துள்ளது.

பல்வேறு திட்டங்களின் பயன்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நோக்கம். இந்த திட்டங்களில், இந்தப் பிரிவு மக்கள் மட்டுமே பயன்பெற முடியும். இந்த தனி ஒதுக்கீடு முறையைத்தான், மத்திய அரசும், பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன.

உதாரணமாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.60 ஆயிரம் கோடி என்றால், அதில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.10,500 கோடி ஒதுக்கப்படுகிறது. இதேபோல, பல்வேறு திட்டங்களின் நிதியில், குறிப்பிட்ட அளவு ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்படுகிறது.

இதேபோல, தமிழக அரசு நிதியில் இருந்து செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் மற்றும் இலவச சீருடை போன்ற திட்டங்களுக்கும் இதே முறையில்தான் நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்த முறையில்தான், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24 பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.7,000 கோடியில், பட்டியல் இனத்தவருக்கென ரூ.1,540 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் பயன் பட்டியலினத்தவரை சென்றடைவதை உறுதிசெய்ய, திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில், பட்டியலினத்தவருக்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒதுக்கப்பட்ட ரூ.1,540 கோடியை பட்டியலினத்தவருக்கு மட்டும்தான் செலவிட இயலும்.

மேலும், இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நிதியை சிறப்பாக செயல்படுத்த சிறப்புச் சட்டம் இயற்றப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. பட்டியல் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இந்த சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் செலவினத்தைக் கண்காணிக்க, நிதித் துறையில் சிறப்பு பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆதிதிராவிடர் துணைத் திட்ட நிதி, பிற திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x