Last Updated : 01 Aug, 2023 08:00 AM

 

Published : 01 Aug 2023 08:00 AM
Last Updated : 01 Aug 2023 08:00 AM

பழவேற்காடு பாலம் பார்க்க மட்டும்தானா? - பணி முடிந்து 6 மாதமாகியும் பயனில்லை; இணைப்புச் சாலை போட மண் இல்லை

பொன்னேரி: பழவேற்காடு -பசியாவரம் பாலம் கட்டுமான பணி முடிந்து, 6 மாதங்களாகியும் பாலத்தை இணைக்கும் சாலைகள் அமைக்க மண் கிடைக்கவில்லை என காலம் கடத்தி பாலத்தில் பயணிக்கும் நினைப்பில் மண் அள்ளிப்போடுவதாக மக்கள் கூறுகின்றனர். வடகிழக்கு பருவமழை நெருங்கும நிலையில் மீனவ மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது பழவேற்காடு ஏரி. தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் பரந்து விரிந்துள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியான இந்த ஏரி, பறவைகள் சரணாலயமாகவும் விளங்குகிறது.

இந்த பழவேற்காடு ஏரி பகுதியில், பசியாவரம் மற்றும் இடமணிகுப்பம், ரஹ்மத் நகர், சாட்டான்குப்பம் உள்ளிட்ட 5 மீனவ கிராமங்கள் உள்ளன. தீவு பகுதிகளாக உள்ள இந்த மீனவ கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இம்மக்கள், மீன்பிடி தொழில் மற்றும் மீன் விற்பனை செய்யவும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும் பழவேற்காடு மற்றும் பொன்னேரி பகுதிகளுக்கு செல்லவேண்டும். அவ்வாறு பழவேற்காடு மற்றும் பொன்னேரி பகுதிகளுக்கு முழங்கால் அளவு நீரில் நடந்துதான், பழவேற்காடு- பொன்னேரி சாலையை அடைய வேண்டும்.

மழைக் காலங்களில் ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயரும் போது, மீனவ மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படகில் பயணம் செய்வது வழக்கமாக உள்ளது.

இதனால் பசியாவரம் உள்ளிட்ட பகுதிகளை பழவேற்காடு சாலையுடன் இணைக்கும் வகையில், பழவேற்காடு ஏரி பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பசியாவரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவ மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அந்த கோரிக்கைகளின் விளைவாக, தமிழ்நாடு அரசு சுனாமி மறுவாழ்க்கை வசதிகள் திட்டத்தின் கீழ், பழவேற்காடு சாலையையும் பசியாவரம் உள்ளிட்டபகுதிகளையும் இணைக்கும் வகையில், பழவேற்காடு ஏரி பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்க திட்டமிட்டது.

அதன்படி மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், சுமார் 7 மீட்டர் அகலம் மற்றும் 432 மீட்டர் நீளத்துக்கு, ரூ.18.70 கோடி மதிப்பில், பழவேற்காடு-பசியாவரம் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி, கடந்த 2020-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது.

இந்த பாலம் மற்றும் பழவேற்காடு சாலையில் உள்ள சிறுபாலத்துக்கு மாற்றாக புதுபாலம் அமைக்கும் பணியை கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், உயர் மட்ட பால கட்டுமானபணி கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.

பழவேற்காடு சாலையில் உள்ள பழமையான சிறுபாலத்துக்கு மாற்றாக புதுபாலம் அமைக்கும் பணிதற்போது நடந்து வருகிறது. ஆனால், உயர் மட்ட பாலத்தை இணைக்கும் வகையில், இணைப்பு சாலைகள் அமைக்கும் பணி மட்டும் இன்னும் தொடங்கப்பட வில்லை. இதனால், வரும் வடகிழக்கு பருவமழையின்போதும் பல்வேறு இன்னலுக்குள்ளாகும் சூழல் உள்ளதாக மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர்.

முருகன்

இதுகுறித்து, இடமணிகுப்பம் முருகன்: பழவேற்காடு- பசியாவரம் உயர்மட்ட பாலம் அமைக்க அரசு கடந்த 2007-08-ம் நிதியாண்டிலேயே நிதி ஒதுக்கியது. ஆனால், பழவேற்காடு ஏரி, பறவைகள் சரணாலயம் என்பதால், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக கடந்த 2020-ல்தான் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அவ்வாறு தொடங்கப்பட்ட பணி திட்டமிட்ட காலத்துக்குள் முடியாமல் உள்ளது.

யாகூப் அலி

ரஹ்மத் நகர் யாகூப் அலி: இந்த உயர் மட்ட பாலம், பசியாவரம் பகுதி மக்களின் பலஆண்டு கனவு. பாலத்தை இணைக்கும் வகையிலான இணைப்பு சாலைகள் அமைக்கும் பணியை துரிதமாக தொடங்கி, வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ’’கட்டுமான பணி முடிந்த பழவேற்காடு-பசியாவரம் உயர்மட்ட பாலத்தை இணைக்கும் வகையில், இரு இணைப்பு சாலைகளை மண் நிரப்பிஅமைக்க வேண்டியுள்ளது. ஆனால், அதற்கு தேவையான மண் கிடைக்கப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. ஆகவே, நாங்கள் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இணைப்பு சாலைக்கு தேவையான மண் கிடைத்துவிடும்.

அதன்பிறகு, இணைப்பு சாலை அமைக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிவுக்கு வரும். அதேபோல், பழவேற்காடு சாலையில் நடந்து வரும் புதுபாலம் அமைக்கும் பணியும் வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும். அதன்பிறகு, உயர் மட்ட பாலமும், பழவேற்காடு சாலை பாலமும் பொதுமக்களின் யன்பாட்டுக்கு வரும் ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x