Published : 15 Nov 2017 11:53 AM
Last Updated : 15 Nov 2017 11:53 AM

கோவை ஆனைகட்டி அருகே அறுவைசிகிச்சை அளிக்கப்பட்ட காட்டுயானை உயிரிழந்தது

கோவையில் காயத்துடன் சுற்றிவந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காட்டுயானை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை மாவட்டம் ஆனைகட்டி மலை கிராமங்கள் வழியாக கடந்த சில நாட்களாக 25 வயது ஆண் யானை சுற்றி வந்தது. அதன் இடது காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் அதனால் சரிவர நடக்க முடியவில்லை. நாளடைவில் அந்த காயம் சீழ் கட்டியாக மாறியது. யானையின் நிலை குறித்து செய்திகள் வெளியானதன் அடிப்படையில், வனத்துறையினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு யானைக்கு சிகிச்சையைத் தொடங்கினர். ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர்புதூரில் யானைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனாலும், அதன் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், நேற்று முன்தினம் அதன் காலில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற வனத்துறை முடிவு செய்தது. கும்கி யானை பாரி துணையோடு காட்டுயானைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், ஆரோக்கியமாக காட்டுக்குள் யானை சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொண்டனூர் புதூர் வனப்பகுதியில் நேற்று அதிகாலை அந்த யானை இறந்துகிடந்தது தெரியவந்தது.

சிகிச்சை பெற்று காட்டுக்குள் திரும்பிய யானை, உடல்நிலை மோசமாகி உயிரிழந்தது. இதையறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று யானையின் உடலை பரிசோதித்தனர். பின்னர், அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் யானையின் உடலில் குடற்புழு தாக்கம் இருந்ததே அதன் உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், அந்த யானையின் உடலில் ஏற்பட்ட காயம் மர்மமான முறையில் இருப்பதாகவும் சூழல் ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் கூறும்போது, ‘யானையின் காலில் பல நாட்களாக இருந்த அந்த காயத்தால் உடல் உள்ளுறுப்புகள் பாதித்துள்ளன. அதுவே அதன் இறப்புக்கு காரணமாகியுள்ளது. யானையின் வால் வெட்டுப்பட்டிருந்தது, அதன் வாயில் இருந்த புழுக்கள் போன்றவையே அதன் அறிகுறிகள்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x